அசாம்-மேகாலயா எல்லையில் மீண்டும் மோதல்
அசாம்-மேகாலயா எல்லையில் இருதரப்பினரிடையே நேற்று மீண்டும் மோதல் வெடித்தது.
ஷில்லாங்,
கடந்த 1972-ம் ஆண்டு அசாம் மாநிலத்தில் இருந்து மேகாலயா மாநிலம் உதயமானது. அப்போது முதல் இரு மாநிலங்களுக்கும் இடையே எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது.
மத்திய அரசின் சமரசத்தால் கடந்த ஆண்டு இரு மாநில அரசுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இருப்பினும் இருமாநில எல்லையில் மோதல் சம்பவங்கள் தொடர் கதையாய் உள்ளன.
இந்த நிலையில் மேகாலயாவின் மேற்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்துக்கும் அசாமின் மேற்கு கர்பி அங்லாங் மாவட்டத்துக்கும் இடையிலான எல்லையில் அமைந்துள்ள லபங்காப் கிராமத்தில் நேற்று இருதரப்பினரிடையே மோதல் வெடித்தது.
இருதரப்பினரும் வில் மற்றும் அம்புகளை பயன்படுத்தி ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். எனினும் இந்த மோதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் இரு மாநில எல்லையில் பதற்றம் நீடிக்கிறது.