சரக்கு வாகனம்-லாரி மோதல்; பெண் உள்பட 3 பேர் சாவு
சீனிவாசபுரா அருகே சரக்கு வாகனம் மீது லாரி மோதியதில் பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.;
கோலார் தங்கவயல்:-
3 பேர் சாவு
கோலார் மாவட்டம் சீனிவாசபுரா தாலுகா கெங்கெனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 45). அதே கிராமத்தை சேர்ந்தவர்கள் வெங்கடம்மா (35), சந்தோஷ் (27), கூலி தொழிலாளிகள். இவர்கள் நேற்று கெங்கேனஹள்ளியில் இருந்து சரக்கு வாகனங்களில் தக்காளியை ஏற்றி கொண்டு சீனிவாசபுரா டவுனுக்கு சென்று கொண்டிருந்தனர். சரக்கு வாகனத்தை வெங்கடேஷ் ஓட்டி வந்தார். சீனிவாசபுரா கேட் அருகே சென்றபோது, எதிரே இருந்து வந்த லாரி ஒன்று சரக்கு வாகனம் மீது மோதியது. இந்த மோதலில் சரக்கு வாகனம் அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் சரக்கு வாகனத்தில் பயணித்த வெங்கடேஷ், வெங்கடம்மா, சந்தோஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.
போலீசார் விசாரணை
இந்த சம்பவத்தை தொடர்ந்து லாரி டிரைவர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டார். இந்த விபத்தை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் இது குறித்து சீனிவாசபுரா புறநகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.