விரிவான விசாரணை தேவைப்படுவதால் இலவசங்கள் தொடர்பான வழக்கை புதிய அமர்வு விசாரிக்கும்: சுப்ரீம் கோர்ட்டு

விரிவான விசாரணை தேவைப்படுவதால் இலவசங்கள் தொடர்பான வழக்கை 3 நீதிபதிகளை கொண்ட புதிய அமர்வு விசாரிக்கும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-08-27 00:38 GMT

புதுடெல்லி,

நமது நாட்டில் நாடாளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல்களில் இலவசங்களை அரசியல் கட்சிகள் போட்டி போட்டு அறிவிப்பது வாடிக்கையாகி விட்டது.

இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பா.ஜ.க.வை சேர்ந்த அஸ்வினி உபாத்யாய் உள்ளிட்டவர்கள் வழக்குகள் தொடுத்துள்ளனர். இந்த வழக்கிற்கு ஆம் ஆத்மி, தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து, வழக்கில் தங்களை சேர்த்துக்கொண்டுள்ளன.

இந்த வழக்கு ஏற்கனவே தலைமை நீதிபதி என்.வி. ரமணா அமர்வின் முன் கடந்த 24-ந்தேதியன்று விசாரணைக்கு வந்தபோது, "இதன் சாதக பாதகங்கள் குறித்து ஆராய மத்திய அரசு ஏன் அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டக்கூடாது?" என கேள்வி எழுப்பியதுடன்," இலவச அறிவிப்புகள், பொருளாதாரத்தை நாசமாக்கும் என்று அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படாத சூழ்நிலையில் இதை தடுக்க முடியாது'' என கருத்து தெரிவித்தது.

மேலும், "சுப்பிரமணியம் பாலாஜி மற்றும் தமிழக அரசு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் 2 நீதிபதிகள் அமர்வு, 2013-ம் ஆண்டு அளித்த தீர்ப்பில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 123-வது பிரிவின்படி, தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகளை லஞ்சமாக கருத முடியாது என்று அளித்த தீர்ப்பு ஆராயப்படும்" எனவும் தெரிவித்தது.

புதிய அமர்வு விசாரிக்கும்

நேற்று தலைமை நீதிபதி என்.வி.ரமணாவின் கடைசி பணி நாள் என்பதால் இந்த வழக்குகளில் தீர்ப்பு வரும் என எதிர்பார்ப்பு இருந்தது.

இந்த நிலையில், அந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஹிமா கோலி, சி.டி.ரவிக்குமார் ஆகியோரை கொண்ட அமர்வின் முன் நேற்று வந்தது. அப்போது நீதிபதிகள், "இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பாக, கோர்ட்டின் முன் எழுப்பிய பிரச்சினைகளில் விரிவான விசாரணை தேவைப்படுகிறது" என தெரிவித்தனர். மேலும் "இந்த வழக்கையொட்டிய முறையீடுகளில் சில அடிப்படை சிக்கல்கள் விவாதிக்கப்பட வேண்டும்" என்றும் கூறினர்.

இதையடுத்து இந்த வழக்கை 3 நீதிபதிகள் புதிய அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு உத்தரவிட்டது.

இதையொட்டி உத்தரவிட்டபோது சுப்ரீம் கோர்ட்டு கூறிய முக்கிய அம்சங்கள்:-

சுப்பிரமணியம் பாலாஜிக்கும், தமிழக அரசுக்கும் மற்றும் பிற தரப்பினருக்கும் இடையேயான வழக்கில் 2013-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் 2 நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பு மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்று வாதிடப்பட்டது. இதை ஆராய்ந்து, இந்த வழக்குகளை தலைமை நீதிபதியின் உத்தரவினை பெற்று 3 நீதிபதிகள் புதிய அமர்வின் முன் விசாரிக்க உத்தரவிடப்படுகிறது. இந்த வழக்குகள் 4 வாரங்களுக்கு பிறகு பட்டியலிடப்படும்.

இந்த வழக்குகளில் விவாதிக்கப்பட வேண்டிய சில அடிப்படை சிக்கல்கள் உள்ளன. இந்த வழக்குகளில் கோரப்படுகிற நிவாரணங்கள் தொடர்பான நீதித்துறை தலையீட்டின் நோக்கம், இந்த 'ரிட்' வழக்குகளில் கோர்ட்டினால் அமல்படுத்தத்தக்க உத்தரவு பிறப்பிக்க முடியுமா, கோர்ட்டால் ஒரு கமிஷன் அல்லது நிபுணர் குழுவை அமைப்பது, இந்த வழக்கு தொடர்பான எந்த நோக்கத்துக்காவது உதவுமா என்பவை அந்த சிக்கல்களில் அடங்கும்.

இந்த வழக்குகளில் எழுப்பப்பட்ட கேள்வி, அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கைகளின் ஒரு பகுதியாகவோ, தேர்தல் பிரசார உரையின்போதோ இலவசங்களை வழங்குவதாக அளிக்கிற வாக்குறுதிகள் தொடர்பானது.

இதுபோன்ற தேர்தல் வாக்குறுதிகள் நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்பதால் அதை அனுமதிக்க கூடாது என்பதுவும் வழக்குதாரர்களின் முக்கிய வாதமாக உள்ளது.

நம்மை போன்ற தேர்தல் ஜனநாயகத்தில், உண்மையான அதிகாரம் என்பது கடைசியில் வாக்காளர்களிடம்தான் உள்ளது என்பது மறுக்க முடியாது.

எந்த கட்சி அல்லது எந்த வேட்பாளர் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை வாக்காளர்கள்தான் முடிவு செய்வார்கள், அடுத்த தேர்தலின்போது, பதவிக்காலத்தில் அந்தக்கட்சி அல்லது வேட்பாளரின் செயல்திறனையும் அவர்களே தீர்மானிக்கிறார்கள்.

நிதிக்கொள்கை தொடர்பான விஷயங்களில் நீதித்துறை வழக்கமாக தலையிடுவதில்லை. ஆனால் வக்கீல் அஷ்வினி உபாத்யாய் உள்ளிட்ட வழக்குதாரர்கள் இலவசங்களால் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளைக்கூட செய்து தர அரசிடம் நிதி இல்லாமல் போய் விடுகிறது என்று கூறிய வாதத்தை கவனத்தில் கொள்ள வேண்டியதிருக்கிறது.

அதே போல் வரி செலுத்துவோரின் பணத்தை பயன்படுத்தி (ஆளும்) கட்சியின் செல்வாக்கை வளர்த்து கொள்வதற்கும், தனது தேர்தல் வாய்ப்புகளுக்காகவும் இலவசங்கள் வழங்கப்படுகின்றன என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

சுப்ரீம் கோர்ட்டு விசாரணை நேரடி ஒளிபரப்பு

சுப்ரீம் கோர்ட்டு வரலாற்றில் முதல்முறையாக வழக்கு விசாரணை நேரடியாக இணையத்தில் ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த ஒளிபரப்பு, தலைமை நீதிபதி என்.வி. ரமணா பணியின் கடைசி நாளையொட்டி நேற்று காலை தொடங்கியது.

இலவசங்கள் தொடர்பான வழக்கு உள்ளிட்ட அவரது அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்த வழக்குகளின் விசாரணை நேரடியாக இணையத்தில் ஒளிபரப்பானது.

அரசியல் சாசனம் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு விசாரணைகளை நேரடியாக ஒளிபரப்பலாம் என கடந்த 2018-ம் ஆண்டு சுப்ரீம்கோர்ட்டு அனுமதி அளித்தது நினைவுகூரத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்