தேர்தலில் வாக்களித்தவர்களுக்கு ஓட்டல்களில் இலவச உணவு வழங்க அனுமதி
பெங்களூருவில் சட்டசபை தேர்தலில் வாக்களித்தவர்களுக்கு ஓட்டல்களில் இலவச உணவு வழங்க கர்நாடக ஐகோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது. இதன்மூலம் மாநகராட்சி விதித்திருந்த தடையை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது.
பெங்களூரு, மே.11-
இலவச உணவுக்கு திடீர் தடை
கர்நாடக சட்டசபை தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் நேற்று காலை 7 மணியில் இருந்து மாலை 6 மணிவரை வாக்களித்து விட்டு, ஓட்டல்களுக்கு வருபவர்களுக்கு இலவசமாக தோசை, இனிப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக பெங்களூரு நிருபதுங்கா ரோட்டில் உள்ள ஒரு ஓட்டல் நெய் தோசை உள்ளிட்ட உணவுகள் வழங்கப்படும் என்றும், இதற்காக தேர்தலில் வாக்களித்ததற்காக தங்களது கைவிரலில் வைக்கப்படும் மையை காட்ட வேண்டும் என்று அறிவித்திருந்தது. மேலும் சில ஓட்டல்கள் பாதி விலைக்கு உணவு பொருட்கள் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தது. இதற்கு முதலில் மாநகராட்சி தலைமை கமிஷனரும், தேர்தல் அதிகாரியுமான துஷார் கிரிநாத் அனுமதி வழங்கி இருந்தார். பின்னர் நேற்று முன்தினம் மாலையில் ஓட்டல்களில் இலவச உணவு, சலுகைகள் வழங்க தடை விதித்து துஷார் கிரிநாத் உத்தரவு பிறப்பித்தார். இந்த தடையை எதிர்த்து பெங்களூரு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் ஓட்டல் உரிமையாளரான கிருஷ்ணராஜ் வழக்கு தொடர்ந்தார்.
ஐகோர்ட்டு அனுமதி
அந்த வழக்கை நேற்று முன்தினம் இரவு கர்நாடக ஐகோர்ட்டு அவசர வழக்காக எடுத்து விசாரணை நடத்தியது. நீதிபதி சிவசங்கரே கவுடா தலைமையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஆஜரான வக்கீல் வாதிடும் போது, கடந்த 2013, 2018-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபை தேர்தல், 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்துவிட்டு வரும் வாக்காளர்களுக்கு இலவச உணவு வழங்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.
ஓட்டல்களில் காலை 7 மணியில் இருந் மாலை 6 மணிவரை தான் இந்த இலவசமும், சலுகைகளும் வழங்கப்படுகிறது. அதுவும் வாக்களித்துவிட்டு வருபவர்களுக்குமட்டுமே இந்த இலவசம் வழங்கப்படுகிறது. இது விதிமுறைகள் மீறல்இல்லை, என்று வாதிட்டார். இதற்கு தேர்தல் அதிகாரி சார்பில் ஆஜரான வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சிவசங்கரேகவுடா, ஜனநாயக கடமையாற்றி விட்டு வருபவர்களுக்கு இலவச உணவு வழங்குவதில் தவறு இல்லை. எனவே மாநகராட்சி விதித்த தடை ரத்து செய்யப்படுகிறது, என்று அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.