கர்நாடகாவில் ஒருபுறம் இலவச மின்சாரம், மறுபுறம் விலை உயர்வு; மக்கள் அதிர்ச்சி

கர்நாடகாவில் 200 யூனிட்டுக்கு கூடுதலாக பயன்படுத்தும் மின்சார கட்டணம் நடப்பு ஜூனில்அதிரடியாக உயர்ந்து உள்ளது.

Update: 2023-06-06 11:18 GMT

பெங்களூரு,

கர்நாடகாவில் சமீபத்திய சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சி 5 வாக்குறுதிகளை வழங்கி இருந்தது. அதில், கிரக ஜோதி என்ற திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு மக்களை கவர்ந்தது.

தேர்தலில் அக்கட்சி பா.ஜ.க.வை வீழ்த்தி மெஜாரிட்டியான இடங்களை கைப்பற்றி தனித்து ஆட்சியமைத்து உள்ளது. வாக்குறுதி வழங்கியது போல், வாடகை வீடு உள்பட அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட்டுக்கு கீழ் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு இலவச மின்சார அறிவிப்பை முதல்-மந்திரி சித்தராமையா அரசு சார்பில் வெளியிட்டார்.

இதன்படி, ஒவ்வொரு மாதமும் 200 யூனிட்டுக்கு குறைவாக பயன்படுத்தும் நுகர்வோருக்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டு உள்ளது.

இதில், நடப்பு ஜூனில் இருந்து 200 யூனிட்டுக்கு கூடுதலாக மின்சாரம் பயன்படுத்தும்போது, அதற்கு மக்கள் ஒரு யூனிட்டுக்கு ரூ.2.89 வழங்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளது.

இதற்கான விளக்கமும் அளிக்கப்பட்டு உள்ளது. எரிபொருள் மற்றும் மின்சார கொள்முதலுக்கான விலை சரிகட்டுதலுக்காக இந்த கூடுதல் தொகை வசூலிக்கப்பட உள்ளது. 1 யூனிட்டுக்கு ரூ.1.49 என்ற தொகையே நடப்பு ஜூனில் வசூல் செய்யப்படும்.

எனினும், கூடுதலாக ஏப்ரல் மாதத்திற்கு 70 பைசா மற்றும் ஜூன் மாதத்திற்கு 70 பைசா என விலையுயர்வு சேர்ந்து ஜூனில் மொத்தம் 1 யூனிட்டுக்கு ரூ.2.89 கட்டணம் செலுத்த வேண்டும். அதுவும் 200 யூனிட்டு எல்லையை கடந்த நபர்களுக்கு இந்த உயர்வு அமலாகும்.

நிலையான கட்டண தொகையும் ரூ.50-ல் இருந்து ரூ.75 ஆக உயர்ந்து உள்ளது. இதனால், கர்நாடக மக்கள் அதிர்ச்சிக்கு ஆளாகினர். எனினும், அடுத்த மாதத்தில் இருந்து இந்த நிலைமை சீரடைய கூடும் என பெங்களூரு மின்சார வினியோக நிறுவன (பெஸ்காம்) மூத்த பொறியியலாளர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்