"இலவச கல்வியும், மருத்துவமும் தேசத்திற்கான அடித்தளங்கள்" - கெஜ்ரிவால்

டெல்லி அரசு பள்ளிகளில் 18 லட்சம் மாணவர்களுக்கு தரமுள்ள, இலவச கல்வி வழங்கப்படுகிறது என கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

Update: 2022-07-17 18:27 GMT

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நான்கு வழி விரைவுச்சாலையை பிரதமர் மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஓட்டுகளை பெறுவதற்காக இலவச பொருட்களை வழங்கும் அரசியல் கட்சிகளின் கலாசாரம் ஆபத்து நிறைந்தது என்றும் நாட்டின் அரசியலில் இருந்து அவை நீக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி இலவச கலாசாரம் பற்றி குறிப்பிட்டதற்கு பதிலளிக்கும் வகையில், டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறும்போது, என் மீது குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. எனது தவறு என்ன? என நான் கேட்க விரும்புகிறேன். டெல்லி அரசு பள்ளிகளில் 18 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களுக்கு தரமுள்ள, இலவச கல்வி வழங்கப்படுகிறது. இது ஒரு குற்ற செயலா?

2 கோடி பேருக்கு இலவச மருத்துவம் வழங்கும் ஒரே நகரம் டெல்லி. சிகிச்சைக்கான முழு செலவையும் அரசே ஏற்கிறது. இலவச மற்றும் தரமுள்ள மருத்துவ சேவை, டெல்லி அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படுகிறது. இதனை 1947 மற்றும் 1950ம் ஆண்டுகளிலேயே அவர்கள் செய்திருக்க வேண்டும். நாங்கள் நாட்டின் அடித்தளம் அமைப்பவர்கள்.

இது இலவச பொருட்களை வழங்குவது அல்ல. என் மீது குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுபவர்கள், அவர்களுக்காக விமானங்கள் மற்றும் தனியார் ஜெட் விமானங்களை வாங்க ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை செலவழிக்கின்றனர். கெஜ்ரிவால் தனக்காக விமானங்களை வாங்கவில்லை. டெல்லியில் பல விசயங்களை இலவசம் என கொண்டு வந்தபோதும், எங்களது பட்ஜெட் லாபத்துடனேயே உள்ளது. இதனை நான் கூறவில்லை. சமீபத்திய தணிக்கை அறிக்கை தெரிவிக்கிறது."

இவ்வாறு கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்