உ.பி.யில் கேலிக்கூத்தாகும் இந்திய அரசியலமைப்பு - சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து விசாரணை நடத்துமாறு முன்னாள் நீதிபதிகள் கடிதம்!

உ.பி.யில் 'அடிப்படை உரிமைகள் மீதான மிருகத்தனமான அடக்குமுறை' குறித்து சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து விசாரணை நடத்துமாறு முன்னாள் நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Update: 2022-06-14 12:32 GMT

புதுடெல்லி,

உ.பி.யில் 'அடிப்படை உரிமைகள் மீதான மிருகத்தனமான அடக்குமுறை' குறித்து தானாக முன்வந்து விசாரணை நடத்துமாறு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி ரமணாவிடம் முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

12 முக்கிய முன்னாள் நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் கையெழுத்திட்ட கடிதத்தில், உத்தரபிரதேசத்தில் மோசமடைந்து வரும் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமையை மீட்க சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.


அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-

உத்தரபிரதேசத்தில் சீர்குலைந்துள்ள சட்டம் ஒழுங்கு நிலைமையை உடனடியாக ஒழுங்குபடுத்த, தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்குமாறு சுப்ரீம் கோர்ட்டை வலியுறுத்தியுள்ளோம்.

குறிப்பாக மாநில காவல்துறை மற்றும் மாநில அதிகாரிகளின் உயர்நிலை அதிகார போக்கு மற்றும் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மீதான கொடூரமான ஒடுக்குமுறை ஆகியவற்றை உள்ளடக்கி குறிப்பிட்டுள்ளோம்.

போராட்டம் நடத்த மக்களுக்கு அனுமதி அளிக்காமல், அத்தகைய நபர்கள் மீது வன்முறை நடவடிக்கை எடுக்க உ.பி மாநில நிர்வாகம் அனுமதித்துள்ளதாக தெரிகிறது.

முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் போராட்டம் நடத்தியவர்கள் மீது தேச பாதுகாப்பு சட்டம் மற்றும் குண்டர்கள் தடுப்பு சட்டம் ஆகியவற்றை பிரயோகிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். போராட்டக்காரர்களை மிருகத்தனமாகவும் சட்டவிரோதமாகவும் சித்திரவதை செய்ய, காவல்துறைக்கு இவை தைரியத்தை அளித்துள்ளன.

உ.பி. முதல்-மந்திரியின் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்பது, எதிர்காலத்தில் யாரும் குற்றம் செய்யாமலும் சட்டத்தை கையில் எடுக்காமலும் இருப்பதற்கு இது ஒரு முன்மாதிரியாக அமைகிறது.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்து, 300க்கும் மேற்பட்டோரை உ.பி போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும், எவ்வித முன்னறிவிப்பின்றி, போராட்டக்காரர்களின் வீடுகள் இடிக்கப்படுகின்றன; போலீஸ் காவலில் இருக்கும் இளைஞர்களை லத்தியால் தாக்கும் வீடியோக்களும், சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த போராட்டக்காரர்களை போலீசார் விரட்டி அடிக்கப்படும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி, நாட்டின் மனசாட்சியை உலுக்கி வருகிறது.

ஆளும் நிர்வாகத்தின் இத்தகைய கொடூரமான அடக்குமுறையானது, குடிமக்களின் உரிமைகளை மீறுவதாகவும், அரசியலமைப்பையும், அரசால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை கேலிக் கூத்தாக ஆக்குவதாகவும் உள்ளது.

சட்டத்தின் ஆட்சியை ஏற்றுக்கொள்ள முடியாத ஆளும் நிர்வாகத்தின் கீழ்த்தரமான அணுகுமுறை இதுவாகும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.அந்த கடிதத்தில் சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதிகள் - பி.சுதர்சன் ரெட்டி, வி.கோபால கவுடா, ஏ.கே.கங்குலி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

மேலும், டெல்லி ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி மற்றும் இந்திய சட்ட ஆணையத்தின் முன்னாள் தலைவர் நீதிபதி ஏபி ஷா, சென்னை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி கே சந்துரு, கர்நாடக ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி முகமது அன்வர் ஆகியோரும் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் சாந்தி பூஷன், இந்திரா ஜெய்சிங், சந்தர் உதய் சிங், ஸ்ரீராம் பஞ்சு, ஆனந்த் குரோவர், பிரசாந்த் பூஷன் ஆகியோர் உட்பட 12 பேர் கையெழுத்திட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்