முன்னாள் பெமினா மிஸ் இந்தியா திரிபுரா ரிங்கி சக்மா காலமானார்

ரிங்கி சக்மாவின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Update: 2024-03-01 12:30 GMT

புதுடெல்லி,

பெமினா மிஸ் இந்தியா திரிபுரா 2017 பட்டம் பெற்ற ரிங்கி சக்மா (வயது 28) காலமானார். இந்த தகவல், மிஸ் இந்தியாவின் சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், ரிங்கியின் புகைப்படத்துடன் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு முதல் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட இவர் ஆரம்ப கட்டத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். ஆனால் புற்றுநோய் அவரது நுரையீரல் மற்றும் மூளைக்கு பரவி, மூளையில் கட்டிக்கு வழிவகுத்தது.

கடந்த மாதம் 22ம் தேதி உடல்நிலை மோசமடைந்ததால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் ஐ.சி.யூ.வில் வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்தார். புற்றுநோயின் காரணமாக அவரது நுரையீரல் ஒன்று கிட்டத்தட்ட செயல்படாமல் இருந்ததால் அவரது உடல்நிலை மோசமடைந்தது. அவரை காப்பாற்ற டாக்டர்கள் திவிர முயற்சி மேற்கொண்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பல வாரங்களுக்கு முன்பு, ரிங்கி இன்ஸ்டாகிராமில் தனது அறுவை சிகிச்சைக்கு நிதி உதவி கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது. ரிங்கியின் மறைவிற்கு நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2017 மிஸ் இந்தியா போட்டியின் போது ரிங்கி தனது சமூகத்திற்கு சேவை செய்வதில் அர்ப்பணிப்புடன் போட்டியிட்டதால் அவருக்கு மிஸ் கான்ஜினியலிட்டி மற்றும் பியூட்டி வித் எ பர்பஸ் ஆகிய 2 துணை தலைப்புகளைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்