காங்கிரஸ் முன்னாள் மந்திரி உடல்நல குறைவால் காலமானார்
அருணாசல பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மந்திரியான துப்டன் தெம்பா உடல்நல குறைவால் காலமானார்.
இட்டா நகர்,
அருணாசல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மந்திரியாக இருந்தவர் துப்டன் தெம்பா. கடந்த சில நாட்களாக உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் ஆர்.கே. மிஷன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
எனினும் அவரது உடல்நலம் நேற்று மோசமடைந்தது. இதனை தொடர்ந்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மாலை காலமானார். அவருக்கு வயது 68.
அவருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். 2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தவாங் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டுள்ளார். வாழ்நாள் முழுவதும் சமூக பணியாற்றிய அவர், எம்.ஏ. மற்றும் எம்.பில் படித்துள்ளார்.
இந்திய வருவாய் துறை அதிகாரியாகவும், பின்னர் இந்திய ஆட்சி பணி அதிகாரியாகவும் இருந்துள்ளார். அவரது மறைவுக்கு அருணாசல பிரதேச காங்கிரஸ் கமிட்டி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளது.