பா.ஜ.க.வில் இணைந்த முன்னாள் காங்கிரஸ் மந்திரி ஏ.கே. அந்தோணியின் மகன்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பாதுகாப்பு மந்திரி ஏ.கே. அந்தோணியின் மகனான, அனில் அந்தோணி பா.ஜ.க.வில் இன்று இணைந்து உள்ளார்.

Update: 2023-04-06 10:53 GMT

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் முதிர்ந்த தலைவர் ஏ.கே. அந்தோணி. மத்திய பாதுகாப்பு மந்திரியாக பதவி வகித்த அனுபவம் வாய்ந்தவர். இவரது மகன் அனில் கே. அந்தோணி. அவர் மத்திய மந்திரிகள் பியூஷ் கோயல் மற்றும் வி முரளீதரன் முன்னிலையில் பா.ஜ.க.வில் இன்று இணைந்து உள்ளார்.

அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்று, உறுப்பினர் அட்டையையும் மத்திய மந்திரி பியூஷ் கோயல் வழங்கினார். கடந்த ஜனவரியில் காங்கிரசில் இருந்து அனில் அந்தோணி விலகினார்.

பிரதமர் மோடி பற்றிய பி.பி.சி. ஆவண படத்திற்கு கண்டனம் தெரிவித்த நிலையில், முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே. அந்தோணியின் மகன் காங்கிரசில் இருந்து விலகினார்.

பி.பி.சி. நிறுவனம் பிரதமர் மோடியை பற்றிய ஆவண படம் ஒன்றை இரண்டு பகுதிகளாக வெளியிட்டது. அதில், 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் பற்றி விமர்சிக்கப்பட்டு இருந்தது. இதற்கு மத்திய வெளிவிவகார அமைச்சகம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

காலனி மனப்பான்மையை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது என்றும் தெரிவித்து இருந்தது. இதனையொட்டி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே. அந்தோணியின் மகனான அனில் அந்தோணி, இந்திய அமைப்புகளின் மீதுள்ள பி.பி.சி.யின் பார்வையானது, இந்திய இறையாண்மையின் வலிமையை குன்ற செய்து விடும் என டுவிட்டரில் பதிவிட்டார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு, எதிர்க்கட்சியான ஆளும் பா.ஜ.க.வுக்கு ஆதரவான அவர் பதிவால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில், அவர் திடீரென காங்கிரசில் இருந்து விலகும் அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், காங்கிரசில் உள்ள எனது பதவியில் இருந்து விலகி உள்ளேன். பேச்சுரிமைக்காக போராடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எனது டுவிட்டை நீக்கும்படி கூறி, சகித்து கொள்ள முடியாத அளவுக்கு தொலைபேசி அழைப்புகள் வந்தன.

ஆனால், அதற்கு நான் மறுத்து விட்டேன் என தெரிவித்து உள்ளார். இதனை தொடர்ந்து, தனது பதவி விலகல் கடிதம் ஒன்றையும் அவர் டுவிட்டரில் வெளியிட்டார். கேரள காங்கிரசின் ஐ.டி. பிரிவு தலைவராகவும் அனில் அந்தோணி பதவி வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இதனால், அப்போதே அவர் பா.ஜ.க.வில் இணைய கூடும் என யூகங்கள் வெளிவந்தன. இந்நிலையில், அவர் பா.ஜ.க.வில் இணைந்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்