பெங்களூருவை சுற்றிப்பார்த்த வெளிநாட்டு பிரதிநிதிகள்
பெங்களூருவில் 3 நாட்கள் நடைபெற்ற ஜி20 நாடுகளின் உயர்மட்ட கூட்டம் நிறைவடைந்ததை அடுத்து பிரதிநிதிகள் விதான சவுதா உள்பட முக்கிய இடங்களை பார்வையிட்டனர்.
பெங்களூரு:-
உச்சி மாநாடு
ஜி20 நாடுகள் சபையில் இந்தியா அங்கம் வகிக்கிறது. இதில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்சு, ஜெர்மனி, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், கொரியா, மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பு இடம் பெற்றுள்ளன. நடப்பு ஆண்டில் ஜி20 நாடுகள் சபையின் தலைமை பதவி இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தலைமை பதவியை இந்தியா கடந்த 1-ந் தேதி முறைப்படி ஏற்றுக்கொண்டது. இந்த ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு அடுத்த ஆண்டு (2023) செப்டம்பர் மாதம் டெல்லியில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக இந்த நாடுகளின் பல்வேறு மட்டத்திலான அதிகாரிகள் கலந்து கொள்ளும் 200-க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளன.
நிதித்துறை பிரச்சினைகள்
இந்த நிலையில் ஜி20 நாடுகள் சபையின் நிதி மற்றும் மத்திய வங்கிகளின் பிரதிநிதிகளின் முதல் உயர்மட்ட கூட்டம் பெங்களூருவில் கடந்த 13-ந் தேதி தொடங்கியது. பெங்களூரு அருகே உள்ள தேவனஹள்ளியில் ஒரு நட்சத்திர ஓட்டலில் இந்த கூட்டம் நடைபெற்றது. மத்திய அரசின் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் அஜய் சேத் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் மைக்கேல் பாத்ரா மற்றும் அந்த உறுப்பு நாடுகளின் நிதி மற்றும் மத்திய வங்கிகளின் உயர் அதிகாரிகள் உள்பட 35 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் உலக பொருளாதார பிரச்சினைகள், உலக பொருளாதாரத்தை சூழ்ந்துள்ள நிலைகள், சர்வதேச நிதியியல் கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் நிதி, நிலையான நிதி, உலக சுகாதாரம், சர்வதேச வரி விதிப்பு முறைகள், நிதி உள்ளடக்கம் உள்ளிட்ட நிதித்துறை சார்ந்த பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் நிதி நிறுவனங்கள் 21-வது நூற்றாண்டில் எழுந்துள்ள உலக சவால்கள், எதிர்கால நகரங்களுக்கு நிதி வழங்குதல், உலக கடன் நிலை பாதிப்புகள், நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்துதல், உற்பத்தியின் பலன்கள், காலநிலை திட்டங்களுக்கு நிதி உதவி அளித்தல், கிரிப்டோ கரன்சி பிரச்சினைகளை ஒருங்கிணைந்து அணுகுதல், சர்வதேச வரி விதிப்பு அம்சத்தை மேம்படுத்துவது போன்ற விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
சவால்களுக்கு தீர்வு
இந்த கூட்டத்தில் 21-வது நூற்றாண்டில் எழுந்துள்ள உலக சவால்களுக்கு தீர்வு காண பன்முக வளர்ச்சி வங்கிகளை பலப்படுத்துதல், பசுமை நிதி அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த நிதி சார்ந்த விஷயங்கள் தொடர்பான கூட்டம் இந்தியா முழுவதும் 40 இடங்களில் நடைபெற உள்ளது. அதில் முதல் கூட்டம் பெங்களூருவில் நடந்து முடிந்துள்ளது. இதில் அடுத்தடுத்த கட்டத்தில் அந்த நாடுகளின் நிதி மந்திரிகள், மத்திய வங்கிகளின் கவர்னர்கள் கலந்து கொள்ளும் கூட்டமும் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் அம்சங்களை அமல்படுத்துவது குறித்து ஜி20 நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் முடிவு அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசி நாளான நேற்று அந்த வெளிநாட்டு பிரதிநிதிகள் பெங்களூருவில் விதான சவுதா, கப்பன் பூங்கா, இந்திய அறிவியல் கழகம், . பெங்களூரு அரண்மனை உள்ளிட்ட இடங்களை நேரில் பார்வையிட்டனர். அவர்களுக்கு கர்நாடகத்தின் உயர்ந்த கலாசாரம் மற்றும் பண்பாடு குறித்த தகவல்கள் எடுத்து கூறப்பட்டன. இந்த நிலையில் ஜி20 நாடுகள் சபையின் விதிமுறைகள் செயற்குழுவின் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இந்த கூட்டம் நாளை (சனிக்கிழமை) நிறைவடைகிறது.
பிரதிநிதிகளை உபசரித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி
கர்நாடக சுற்றுலாத்துறை இயக்குனரான ராம்பிரசாத் மனோகர், ஜி20 நாடுகளின் பிரதிகளை வரவேற்கும் குழுவுக்கு தலைமை தாங்கினார். அவரது தலைமையில் பிரதிநிதிகளுக்கு சிறப்பான வரவேற்பு, உபசரிப்பு அளிக்கப்பட்டது. மேலும் கர்நாடகத்தின் சுற்றுலா தலங்கள், கலாசாரம், பண்பாடு, காபி தோட்டங்கள், கையால் நெய்யப்படும் பட்டு சேலைகள், கைவினை பொருட்கள், சன்னபட்டணா பொம்மைகள் குறித்து அந்த பிரதிநிதிகளுக்கு அவர் முழு விவரங்களை எடுத்து கூறினார். இதற்காக அந்த ஓட்டலில் சிறிய அளவில் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் அந்த பொருட்கள் எல்லாம் வைக்கப்பட்டு இருந்தன. கர்நாடகத்தின் நாட்டுப்புற கலையான டொள்ளு குனிதா, புல்லாங்குழல், பிடில் குறித்தும் அவர்களுக்கு ராம்பிரசாத் மனோகர் விவரித்தார். யக்ஷகானா, வீரகாசே மற்றும் பூஜா குனிதா போன்ற நடனங்கள் கலைஞர்கள் நடனமாடி காட்டினர். கடைசி நாளான நேற்று அந்த பிரதிநிதிகள் பெங்களூருவில் முக்கிய இடங்களுக்கு அவர்களை ஒருங்கிணைத்து அழைத்து வந்து காட்டி விவரங்களை கூறினார். ஐ.ஏ.எஸ். அதிகாரி ராம்பிரசாத் மனோகர் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.