வரலாற்றில் முதன்முறை: சுப்ரீம் கோர்ட்டு வழக்கு விசாரணை காட்சிகள் 'லைவ்'வாக வெளியீடு

வரலாற்றில் முதன்முறையாக, சுப்ரீம் கோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணை காட்சிகள் நேரடி நிகழ்வாக இன்று வெளியிடப்பட்டு உள்ளன.;

Update:2022-09-27 13:43 IST



புதுடெல்லி,


மராட்டியத்தில் கடந்த ஜூன் மாதம் நடந்த அரசியல் குழப்பத்தில் உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்து, பா.ஜ.க. ஆதரவுடன் சிவசேனா அதிருப்தி அணியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே ஆட்சி அமைத்தார். அப்போது எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க முடிவு விவகாரம், சபாநாயகர், கவர்னரின் அதிகாரங்கள் தொடர்பாக உத்தவ் தாக்கரே மற்றும் ஷிண்டே அணியினர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இதேபோன்று தாங்கள் தான் உண்மையான சிவசேனா என்றும், இதனால் கட்சியின் வில் அம்பு சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று ஷிண்டே அணி தேர்தல் கமிஷனில் முறையிட்டதை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீது அவசரகதியில் முடிவு எடுக்க வேண்டாம் என்று தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இந்த மனுக்கள் கடந்த 6-ந்தேதி, 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஷிண்டே தரப்பில் ஆஜரான வக்கீல், மராட்டியத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற உள்ளன. எனவே கட்சியின் சின்னம் யாருக்கு சொந்தம் என்பது விரைந்து முடிவு எடுக்கப்பட வேண்டும்.

இந்த விஷயத்தில் தேர்தல் கமிஷனின் முடிவை கோர்ட்டு கட்டுப்படுத்தாது என்றார். இதனையடுத்து கட்சி சின்ன விவகாரத்தில் உத்தவ் தாக்கரே தரப்பு தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் 3 அரசியல் சாசன அமர்வுகளில், நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 2-வது அரசியல் சாசன அமர்வில் இந்த வழக்கு விசாரணை இன்று நடந்தது. இந்த விசாரணை காட்சிகளை நேரடியாக லைவ் நிகழ்ச்சியாக கோர்ட்டு வெளியிட்டு உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி யு.யு. லலித் தலைமையிலான அமர்வு நேற்று கூறும்போது, யூ-டியூப் பயன்படுத்தி பார்ப்பதற்கு பதிலாக சுப்ரீம் கோர்ட்டின் நடவடிக்கைகளை லைவ் நிகழ்வாக காண்பதற்கான தளம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என கூறினார்.

இதன்படி, அனைத்து அரசியல் சாசன அமர்வுகளின் விசாரணை நிகழ்வுகளும் இன்று முதல், லைவ்வாக வெளியிட கோர்ட்டு முடிவு செய்துள்ளது. எனினும், யூ-டியூப்பில் கோர்ட்டு நிகழ்வுகளை லைவ்வாக வெளியிட்டும், பின்னர் அவற்றை கோர்ட்டு தனது செர்வரில் வைத்து, அதன் வழியே வெளியிடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை தொடர்ந்து, கோர்ட்டு நடவடிக்கைகளை பொதுமக்கள் தங்களது மொபைல் போன்கள், லேப்டாப்புகள் மற்றும் கணினிகளின் வழியே தடையின்றி காண முடியும்.

இதன்படி, மராட்டியத்தில் சிவசேனா தொடர்புடைய வழக்கு விசாரணை காட்சிகளை, நேரடியாக லைவ் நிகழ்ச்சியாக கோர்ட்டு வெளியிட்டு உள்ளது. இது தவிர்த்து, 2 வழக்குகளின் நேரடி காட்சிகளை கொண்ட நிகழ்வுகள் பொதுமக்கள் பார்க்கும் வகையில் வெளியிடப்பட்டு உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்