போலீஸ் நிலையத்தில் புகார் வாங்க மறுத்ததால் இன்ஸ்பெக்டர் அலுவலகம் முன்பு நள்ளிரவு வரை கைக்குழந்தையுடன் பெண் போராட்டம்

கலசாவில், போலீஸ் நிலையத்தில் புகார் வாங்க மறுத்ததால் இன்ஸ்பெக்டர் அலுவலகத்துக்கு சென்ற பெண் ஒருவர் தனது கைக்குழந்தையுடன் நள்ளிரவு வரை போராட்டம் நடத்தினார்.

Update: 2023-06-02 18:45 GMT

சிக்கமகளூரு-

கலசாவில், போலீஸ் நிலையத்தில் புகார் வாங்க மறுத்ததால் இன்ஸ்பெக்டர் அலுவலகத்துக்கு சென்ற பெண் ஒருவர் தனது கைக்குழந்தையுடன் நள்ளிரவு வரை போராட்டம் நடத்தினார்.

மானபங்கம்

சிக்கமகளூரு மாவட்டம் கலசா தாலுகா குதிரேமுகா பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரா. கூலி தொழிலாளி. இவரது மனைவி சுனிதா. இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் நவீன் மற்றும் ஸ்ரேயாஸ். இவர்களுக்கும், ராஜேந்திராவுக்கும் பணம், கொடுக்கல்-வாங்கல் தகராறு இருந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு நவீன் மற்றும் ஸ்ரேயாஸ் ஆகியோர் ராஜேந்திராவின் வீட்டுக்கு சென்று தகராறு செய்தனர். அப்போது அவர் ராஜேந்திராவின் மனைவி சுனிதாவை மானபங்கம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி குதிரேமுகா போலீசில் புகார் அளிப்பதற்காக தனது 4 வயது மகனுடன் சுனிதா குதிரேமுகா போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அப்போது போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்த போலீசார் புகாரை வாங்க மறுத்தனர். இதையடுத்து தனது புகாரை பெற்றுக் கொள்ளும்படி சுனிதா போராட்டம் நடத்தினார். இருப்பினும் போலீசார், அவரது போராட்டத்திற்கு செவி சாய்க்கவில்லை.

நள்ளிரவு வரை போராட்டம்

இதனால் சுனிதா தனது 4 வயது குழந்தையுடன் கலசாவில் உள்ள சர்க்கிள் இன்ஸ்பெக்டர் அலுவலகத்துக்கு சென்று அங்கும் போராட்டத்தில் ஈடுபட்டார். நள்ளிரவு ஒரு மணி வரை அவர் போராட்டம் நடத்தினார். கைக்குழந்தையுடன் அவர் நள்ளிரவு ஒரு மணி வரை போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அங்கு வந்தார். அதையடுத்து அவரிடம் சுனிதா புகாரை கொடுத்தார்.

புகார் மனுவை பெற்றுக் கொண்ட இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தினார். பின்னர் அதுபற்றி வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் நவீன் மற்றும் ஸ்ரேயாஸ் ஆகியோர் மீது நேற்று காலையில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். புகார் கொடுக்க சென்ற இடத்தில் நள்ளிரவு வரை சுனிதா தனது கைக்குழந்தையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்