கட்டபிரபா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு: பாகல்கோட்டையில் 35 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கட்டபிரபா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாகல்கோட்டையில் 35 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-09-14 22:16 GMT

பாகல்கோட்டை:

ஆறுகளில் வெள்ளம்

மராட்டியத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் எடுத்து உள்ளதால் அங்கு உள்ள கொய்னா அணையில் இருந்து கிருஷ்ணா ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. அதுபோல பெலகாவி, கதக், பாகல்கோட்டை, யாதகிரி மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் மல்லபிரபா, கட்டபிரபா, கிருஷ்ணா, பீமா ஆகிய ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

கட்டபிரபா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பெலகாவி மாவட்டம் உக்கேரி தாலுகா நூதகட்டி கிராமத்தில் 100 ஏக்கர் பயிர்கள் சேதம் அடைந்து உள்ளன. சிக்கோடி தாலுகாவில் கல்லோலா-எடியூரா கிராமங்களை இணைக்கும் தரைப்பாலம் மூழ்கியுள்ளது. கல்லோலா கிராமத்திற்குள் வெள்ளநீர் புகுந்து உள்ளது. மேலும் சிக்கோடி தாலுகாவில் பல கிராமங்களில் கரும்பு தோட்டங்களை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. கோகாக் தாலுகா யாதவாடா கிராமத்திற்குள் வெள்ளம் புகுந்தது.

கோவில்கள் மூழ்கின

பாகல்கோட்டை மாவட்டம் முதோல் தாலுகா மிர்ஜி கிராமத்தில் கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தில் 10 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி உள்ளது. முதோல் தாலுகாவில் 35 கிராமங்களுக்கு வெள்ள அபாய பீதி ஏற்பட்டு உள்ளது. பீமா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் யாதகிரியில் உள்ள கங்கலேஷ்வரா, வீர ஆஞ்சநேயா கோவில்களில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

கலபுரகியில் பீமா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் குருசனகி கிராமத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் 100-க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் சேதம் அடைந்து உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்