மராட்டியம்: ரெயில் நிலைய நடைமேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து - 20 பேர் காயம்

ரெயில் நிலையத்தில் உள்ள நடைமேம்பாலத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 20-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.;

Update:2022-11-27 19:34 IST

மும்பை,

மராட்டிய மாநிலம் சந்திராபூர் மாவட்டத்தில் பல்லார்ஷா ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்தின் 1-வது நடைமேடையில் இருந்து 4-வது நடைமேடைக்கு செல்வதற்காக நடைமேம்பாலம் வழியாக பயணிகள் பலர் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது நடைமேம்பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் நடைமேம்பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்தவர்கள் 60 அடி உயரத்தில் இருந்து கீழே உள்ள தண்டவாளத்தின் மீது விழுந்தனர். இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Tags:    

மேலும் செய்திகள்