ரஷிய போரால் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் உணவு நெருக்கடி; ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்
ரஷிய போரால் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் உணவு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது என்று ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.;
புதுடெல்லி,
டெல்லியில் தேசிய ராணுவ கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். இதன்பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போரானது, ஆசிய மற்றும் ஆப்பிரிக்காவை சேர்ந்த பல்வேறு நாடுகளில் உணவு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
போரின் விளைவால் ஏற்பட்டு உள்ள எரிபொருள் நெருக்கடியையும் உலக நாடுகள் சந்தித்து வருகின்றன. அதில் இந்தியாவும் அடங்கும். சர்வதேச எரிபொருள் வினியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறால், அதிக விலை கொடுத்து எரிபொருளை இறக்குமதி செய்யும் நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டு உள்ளது என பேசியுள்ளார்.
நாட்டில் புது பரிமாணத்திலான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சைபர் தாக்குதல் மற்றும் தகவல் சார்ந்த தாக்குதலானது பாதுகாப்பு உட்கட்டமைப்பில் ஒரு பெரிய சவாலாக உருவெடுத்து உள்ளது என அவர் கூறியுள்ளார்.
இந்த சைபர் தாக்குதல்களால் மின்சக்தி உற்பத்தி, போக்குவரத்து, பொது துறை மற்றும் உற்பத்தி தொழிற்சாலைகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன என அவர் கூறியுள்ளார். இதேபோன்று, தகவல் சார்ந்த தாக்குதலால், நாட்டின் அரசியல் நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.