புயல் பாதிப்பு ; தமிழ்நாட்டிற்கு ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்தது மத்திய அரசு

வெள்ள பாதிப்பு நிவாரணமாக ரூ. 5,060 கோடி ரூபாயை முதல் கட்டமாக ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு கோரியிருந்தது.;

Update:2023-12-07 13:07 IST

புதுடெல்லி,

மிக்ஜம் புயலின் தாக்கத்தால் சென்னையில் மழை கொட்டி தீர்த்தது. 36 மணி நேரம் இடைவிடாது கொட்டிய கனமழையால் சென்னை மாநகரமே தத்தளித்தது. தற்போது மீட்பு  பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனால், சென்னையில் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் வடிந்துள்ளது. எனினும், புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

இதற்கிடையே, வெள்ள பாதிப்பு நிவாரணமாக 5,060 கோடி ரூபாயை முதல் கட்டமாக ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு கோரியிருந்தது. இந்த நிலையில், புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழ்நாட்டிற்கு ரூ.450 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. 

இதுதொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா எக்ஸ் வலைதளத்தில் கூறி இருப்பதாவது:-

மிக்ஜம் புயலால் தமிழ்நாடு, ஆந்திரா பாதிக்கப்பட்டுள்ளன. பாதிப்புகள் வேறுபட்டாலும் இரு மாநிலங்களிலும் பல பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன. பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாநில அரசுகளுக்கு உதவ பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மாநில பேரிடர் நிவாரண நிதியின் 2-வது தவணை தொகையாக தமிழகத்துக்கு ரூ.450 கோடியும், ஆந்திராவுக்கு ரூ.493.60 கோடியும் முன்கூட்டியே வழங்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார். இந்த இரு மாநிலங்களுக்கும் ஏற்கனவே முதல் தவணை தொகை வழங்கப்பட்டு உள்ளது.

புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு வர நான் பிரார்த்திக்கிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் நாங்கள் உங்களுடன் நிற்கிறோம். விரைவில் நிலைமை சீரடைய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அமித் ஷா கூறியிருக்கிறார்.

இதேபோல் முதல் முறையாக சென்னைக்கு ஒருங்கிணைந்த நகர்ப்புற வெள்ள தடுப்பு திட்டத்திற்கு ரூ.561.29 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக அமித்ஷா தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

சென்னை கடந்த 8 ஆண்டுகளில் 3-வது பெரிய வெள்ளத்தை எதிர்கொண்டு உள்ளது. அதிக மழைப்பொழிவு ஏற்பட்டு, திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. நகர்ப்புற வெள்ள தடுப்பு திட்டத்திற்கு தேசிய பேரிடர் தடுப்பு நிதியத்தின் கீழ் சென்னைக்கு ஒருங்கிணைந்த நகர்ப்புற வெள்ள தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூ.561.29 கோடி ஒதுக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இதில் மத்திய அரசு உதவியாக ரூ.500 கோடி வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் சென்னை மழை வெள்ளத்தை சமாளிக்க கூடியதாக மாற உதவும். நகர்ப்புற வெள்ளத் தடுப்பு முயற்சியில் இது முதன்மையானது. இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

மாநில பேரிடர் நிதியின் கீழ் ரூ.450 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை நகர்புற வெள்ள தடுப்பு நிதியாக ரூ.561.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில் மத்திய அரசு ரூ.1011.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்