நடுக்கடலில் தீப்பற்றி எரிந்த மீன்பிடி படகு - விசாகப்பட்டினம் அருகே பரபரப்பு
விசாகப்பட்டினம் அருகே நடுக்கடலில் மீன்பிடி படகு தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;
அமராவதி,
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இன்று அதிகாலை ஒரு படகில் 5 மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றனர். இந்நிலையில், நடுக்கடலில் இன்று மதியம் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, படகில் இருந்த மோட்டார் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இதனால் படகில் இருந்து கரும்புகை கிளம்பியது. இதனைக் கண்டு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் சிலர் தீப்பிடித்து எரிந்த படகிற்கு அருகே சென்றனர். இதையடுத்து தீப்பற்றி எரிந்த படகில் இருந்த 5 மீனவர்களும் கடலில் குதித்து மற்றொரு படகில் ஏறி உயிர் தப்பினர். இந்த சம்பவத்தில் படகு முழுவதுமாக எரிந்து கடலில் மூழ்கியது. அந்த படகின் மதிப்பு சுமார் 35 லட்சம் ரூபாய் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.