வங்காளத்தை பிரிப்பதற்காக எல்லைகளை தாண்டி ஆயுதங்கள் கடத்தப்படுகின்றன - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
மேற்கு வங்காளத்தின் வடக்கு பகுதியை மாநிலத்திலிருந்து பிரிக்க பீகார் மற்றும் சர்வதேச எல்லைகள் வழியாக ஆயுதங்கள் கடத்தப்படுவதாக மம்தா பானர்ஜி குற்றம் சுமத்தி உள்ளார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காளம், நதியா மாவட்டத்தில் நடைபெற்ற நிர்வாக கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, மேற்கு வங்காளத்தின் வடக்கு பகுதியை மாநிலத்திலிருந்து பிரிக்க பீகாரில் இருந்தும் சர்வதேச எல்லைகள் வழியாகவும் துப்பாக்கிகள் கடத்தப்படுகிறது. ஆயுதங்களை கடத்த விஐபிகளின் வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இது போன்ற முயற்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நீதிபதிகள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வகுப்புவாத சக்திகள் மீது கண்களை வைத்திருங்கள். டிசம்பரில் இருந்து வன்முறையை தூண்ட சிலர் திட்டமிட்டுள்ளனர். அவர்கள் வகுப்புவாத கலவரத்தை தூண்ட விரும்புகிறார்கள். அவர்கள் ஏற்கனவே கர்நாடகாவில் தொடங்கியுள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் விதியின்படி அனைவரின் பெயரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறேன். 18 வயது நிரம்பியவர்களின் பெயர்களை சேர்க்க வேண்டும், மத அடையாளத்தின் பேரில் யாரையும் ஒதுக்கி வைக்கக் கூடாது. எல்லைப் பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 சதவீத வாக்காளர்கள் புதிய பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.