திருச்சி-குஜராத் விரைவு ரெயிலில் பயங்கர தீ விபத்து
பயணிகள் சுதாரித்துக் கொண்டு உடனடியாக ரெயில் பெட்டியை விட்டு கீழே இறங்கியதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.;
சூரத்,
தமிழ்நாட்டின் திருச்சியில் இருந்து குஜராத் மாநிலத்தின் ஸ்ரீகங்கா நகர் வரை ஹம்சபர் விரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம்போல் திருச்சியில் இருந்து புறப்பட்ட இந்த விரைவு ரெயில் இன்று மதியம் 2 மணியளவில் குஜராத்தின் சூரத் நகரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள வல்சத் ரெயில் நிலையத்தை அடைந்தது.
மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்தபோது அந்த ரெயிலின் ஒரு பெட்டியில் இருந்து திடீரென குபுகுபுவென புகை வந்தது. பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் அந்த ரெயில் பெட்டி தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்த என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார்.
ரெயில் நிறுத்தப்பட்டதை உணர்ந்த பயணிகள் சுதாரித்துக் கொண்டு உடனடியாக பெட்டியை விட்டு கீழே இறங்கினர். இதனால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. தகவலறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரெயில்வே அதிகாரிகளும், போலிசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் இதுவரை தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.