டெல்லியில் பஞ்சாப் விரைவு ரெயிலில் தீ விபத்து

டெல்லி சரிதா விஹார் காவல் நிலையம் அருகே பயணிகள் ரெயில் பெட்டியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.;

Update:2024-06-03 18:16 IST

புதுடெல்லி,

உலகின் மிகப்பெரிய பொதுத்துறைகளில் ஒன்றாக இந்திய ரெயில்வே விளங்குகிறது. 130 ஆண்டுகள் பராம்பரியம் கொண்ட இந்திய ரெயில்வேயில் 12 லட்சம் பேர் பணிபுரிகிறார்கள். ஆண்டு தோறும் 500 கோடிக்கும் அதிகமானவர்கள் இந்திய ரெயில் சேவையை பயன்படுத்துகிறார்கள். இருப்பினும் சமீபகாலமாக தொடர் விபத்துகளை சந்தித்து வருவதால் இந்திய ரெயில்வேத்துறையின் நிர்வாகத்தின் மீது பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.

கடந்த ஆண்டு ஜூன் 2-ந்தேதி ஒடிசாவின் பாலசோர் ரெயில் நிலையம் அருகே எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் கடந்த அக்டோபர் மாதம் ராயகடா பயணிகள் ரெயில் விபத்திற்குள்ளானது. இதில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தின்போது ரெயில் என்ஜின் டிரைவர்கள் செல்போனில் கிரிக்கெட் பார்த்து கொண்டிருந்ததே விபத்திற்கு காரணம் என கூறப்பட்டது. இந்தநிலையில் சரியாக பாலசோர் ரெயில் விபத்து ஏற்பட்டு ஒரு ஆண்டு முடிந்தநிலையில் நேற்று பஞ்சாபில் சரக்கு ரெயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டு விபத்தில் சிக்கின. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதும் ஏற்படவில்லை.

இந்நிலையில், டெல்லியில் சரிதா விஹார் காவல்நிலையம் அருகே ஷான்-இ-பஞ்சாப் தாஜ் விரைவு ரெயிலின் 2 பெட்டிகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. டெல்லியில் இருந்து பஞ்சாப் செல்லும் தாஜ் விரைவு ரெயிலில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.

ரெயிலின் 2 பெட்டிகளில் திடீரென்று பெரும் தீ விபத்து ஏற்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப்பணியிலும் ஈடுபட்டு தீயை அணைத்தனர்.

மேலும் தீ விபத்திற்கான காரணம் குறித்து ரெயில்வே துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து, ரெயில்வே அதிகாரிகள் தெரிவிக்கையில், ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தினால் எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவித்தனர். இந்த ரெயிலில் பயணித்த அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர் என வடக்கு ரெயில்வேயின் முதன்மை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்