கொரோனா நோயாளி உயிரிழப்பு - 5 டாக்டர்கள் மீது வழக்குப்பதிவு
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இளைஞர் கடந்த ஆண்டு உயிரிழந்தார்.
லக்னோ,
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை கடந்த ஆண்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. வைரஸ் பாதிப்பு, ஆக்சிஜன், மருந்து தட்டுப்பாடு உள்பட பல்வேறு காரணங்களால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
இதனிடையே, கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 5 டாக்டர்கள் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலின் 2-வது அலை உச்சத்தில் இருந்த காலகட்டமான கடந்த ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த 20 வயது இளைஞருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து, வைரஸ் பாதிக்கப்பட்ட இளைஞனை அவரது குடும்பத்தினர் நெய்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
டாக்டர்கள் பரிந்துரையின் படி ரெம்டெசிவீர் மருந்தை வாங்கி கொடுத்தபோதும், கவனக்குறைவாக செயல்பட்டு மருந்தை நோயாளிக்கு செலுத்தாமல் டாக்டர்கள் காலம் தாழ்த்தியதாகவும் இதனாலேயே இளைஞர் உயிரிழந்துவிட்டதாகவும் அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர்.
இது தொடர்பாக அந்த மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி இளைஞரின் குடும்பத்தினர் மருத்துவத்துறையில் புகார் அளித்தனர்.
இந்த புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மருத்துவத்துறையினர், உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினர் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும்படி போலீசில் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனை தொடர்ந்து கவனக்குறைவாக செயல்பட்டு கொரோனா நோயாளி உயிரிழப்பு ஏற்படுத்தியதாக தனியார் மருத்துவமனையின் 5 டாக்டர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.