பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.500 அபராதம்

மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் சென்ற பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2023-05-18 15:35 GMT

பெங்களூரு:-

பெங்களூருவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து வருகிறார்கள். இந்த நிலையில், பெங்களூரு கப்பன் பார்க் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளில் ஒரு போலீஸ்காரரும், பெண் போலீசாரும் சென்றார்கள். அவர்களில் பின் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் போலீஸ் ஹெல்மெட் அணியாமல் சென்றிருந்தார். இதனை ஒரு நபர் தனது செல்போனில் படம் பிடித்தும், வீடியோ எடுத்தும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படம், வீடியோ வேகமாக பரவியதுடன், சாதாரண வாகன ஓட்டிகளுக்கு ஒரு நியாயம், போலீசாருக்கு ஒரு நியாயமா?, அவருக்கு அபராதம் விதிக்கப்படுமா? என்று சமூக வலைத்தளங்களில் மக்கள் கேள்வி எழுப்பி இருந்தார்கள்.

இதையடுத்து, சுதாரித்து கொண்ட கப்பன் பார்க் போக்குவரத்து போலீசார், இதுபற்றி விசாரணை நடத்தினார்கள். அப்போது ஹெல்மெட் அணியாமல் சென்றது ஒரு பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் என்று தெரிந்தது. இதையடுத்து, அந்த சப்-இன்ஸ்பெக்டர் மீது கப்பன் பார்க் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பதுடன், ரூ.500 அபராதமும் விதித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்