பெண் டாக்டர் பிரேத பரிசோதனையில் குளறுபடி; டாக்டர் உள்பட 2 பேரிடம் சி.பி.ஐ. தீவிர விசாரணை

பெண் டாக்டர் பிரேத பரிசோதனையின்போது, 2 விசயங்களில் குளறுபடி நடந்துள்ளது என சி.பி.ஐ. அதிகாரிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.;

Update:2024-09-25 21:28 IST

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த ஆகஸ்டு 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த வழக்கை போலீசார் விசாரித்த நிலையில், கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவையடுத்து, சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கில், ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரியின் முன்னாள் முதல்வரான சந்தீப் கோஷ் மற்றும் தாலா காவல் நிலைய பொறுப்பு அதிகாரியான அபிஜித் மொண்டல் ஆகியோரை சி.பி.ஐ. கைது செய்தது. இதனால் வழக்கில் திருப்பம் ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவத்தில், பெண் டாக்டரின் பிரேத பரிசோதனையில் குளறுபடிகள் நடந்துள்ளன என தெரிய வந்துள்ளது. இதுபற்றி விசாரணை செய்ய நேரில் ஆஜராகும்படி அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் அபூர்வா பிஸ்வாஸ் மற்றும் பிரேத பரிசோதனை உதவியாளர் ஒருவர் என 2 பேருக்கு அழைப்பு விடப்பட்டது.

இதன்படி, அவர்கள் இருவரும் சி.பி.ஐ. முன் இன்று ஆஜரானார்கள். அவர்கள் இருவரும் பிரேத பரிசோதனையில் நடைமுறை தவறுகளை செய்துள்ளனர் என கூறப்படுகிறது. டாக்டர் பிஸ்வாசுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்புவது இது 3-வது முறையாகும். கடந்த 22-ந்தேதி மற்றும் 24-ந்தேதி அவர் விசாரிக்கப்பட்டார்.

22-ந்தேதி செய்தியாளர்களிடம் பேசிய பிஸ்வாஸ், பெண் டாக்டரின் மாமா என கூறிய அண்டை வீட்டுக்காரர் ஒருவர் விரைவாக பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என அவசரப்படுத்தினார் என்றார்.

ஆனால் இதுபற்றி டாக்டர் பிஸ்வாஸ் ஏன்? மருத்துவமனையிடமோ அல்லது போலீசாரிடமோ உடனடியாக தகவல் தெரிவிக்கவில்லை என புலனாய்வு அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த பிரேத பரிசோதனையின்போது, 2 விசயங்களில் குளறுபடி நடந்துள்ளது என அதிகாரிகள் சுட்டிக்காட்டி உள்ளனர். விதிகளுக்கு புறம்பாக, சூரியன் மறைந்த பின்னர் பிரேத பரிசோதனை நடந்துள்ளது. 2-வது, வழக்கின் தீவிரத்தன்மையை முன்னிட்டு வழக்கத்தில் இல்லாத வகையில் 70 நிமிடங்களில் பிரேத பரிசோதனை நடந்து முடிந்துள்ளது என அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்