கள்ளக்காதலை கண்டித்ததால் மாமனார்-மாமியார் கொலை: மருமகள்,கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை
கள்ளக்காதலை கண்டித்த தம்பதியை கொலை செய்த வழக்கில், மருமகள், கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து பாலக்காடு கோர்ட்டு தீர்ப்பளித்தது.;
பாலக்காடு,
பாலக்காடு மாவட்டம் தோலன்னூர் அருகே புளிக்கப்பரம்பு பகுதியை சேர்ந்தவர் சுவாமிநாதன் (வயது 72), ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவருடைய மனைவி பிரேமகுமாரி (65). இவர்களது மகன் பிரதீப்குமார். இவர் குஜராத்தில் ராணுவப் பணி செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜிஷா (36).
இதற்கிடையே ஜிஷாவுக்கும், எர்ணாகுளம் மாவட்டம் பரவூரை சேர்ந்த சதானந்தன் (38) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது கள்ளக்காதலாக மாறியது. சுவாமிநாதன் வீட்டருகே உள்ள தனி வீட்டில் ஜிஷாவை தனியாக சந்தித்து சதானந்தன் உல்லாசம் அனுபவித்து வந்தார். இது சுவாமிநாதன், பிரேமகுமாரிக்கு தெரிய வரவே, ஜிஷாவை கண்டித்து உள்ளனர். இதனால் அவர்கள் தம்பதியை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர்.
அதன்படி 11.9.2017 அன்று இரவு வீட்டில் இருந்த சுவாமிநாதனை சுத்தியலால் அடித்தும், பிரேமகுமாரி முகத்தை தலையணையால் அமுக்கி மூச்சு திணறடித்தும் ஜிஷா, சதானந்தன் சேர்ந்து கொலை செய்தனர். தகவல் அறிந்த கோட்டாயி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜிஷாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் சந்தேகம் வராமல் இருக்க தான் அணிந்திருந்த 12 பவுன் நகையை திருடி விட்டு, ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறினார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் கள்ளக்காதலை கண்டித்ததால் தம்பதியை கள்ளக்காதலர்கள் கொன்றதும், தடயங்களை அழிக்க முயன்றதும் தெரியவந்தது. தொடர்ந்து ஜிஷா, சதானந்தன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கொலைக்கு பயன்படுத்திய சுத்தியல் போன்ற ஆயுதங்கள் அருகே உள்ள கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை பாலக்காடு மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
தம்பதியை கொலை செய்த மருமகள் ஜிஷாவுக்கு ஆயுள் தண்டனை, கள்ளக்காதலன் சதானந்தனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அனந்த கிருஷ்ணா தீர்ப்பளித்தார்.