விவசாயிகள் போராட்டம்: 30,000 கண்ணீர் புகை குண்டுகளை ஆர்டர் செய்த டெல்லி போலீசார்
விவசாயிகள் நுழைவதை தடுக்க எல்லைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் எல்லையை ஒட்டிய சந்துகள் மற்றும் தெருக்களிலும் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
டெல்லியை நோக்கி பேரணி நடத்தும் போராட்டத்தை விவசாய சங்கங்கள் அறிவித்த நிலையில், நேற்று முன்தினம் பஞ்சாப்பில் இருந்து 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட டிராக்டர்களுடன் விவசாயிகள் டெல்லி நோக்கி புறப்பட்டனர். ஆனால், அரியானா மாநில அரசு, பஞ்சாப்-அரியானா இடையிலான ஷம்பு எல்லையிலும், தடா சிங்க்வாலா-கானாரி எல்லையிலும் ஏராளமான தடுப்புகளை அமைத்திருந்தது.
தடுப்புகளை விவசாயிகள் அகற்ற முயன்றபோது, அவர்கள் மீது அரியானா போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். 2 இடங்களிலும் இந்த தாக்குதல் நடந்தது. இதில், பல விவசாயிகள் காயமடைந்தனர். விவசாயிகள் நடத்திய கல்வீச்சில், துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 24 போலீசார் காயமடைந்தனர்.
இதைத்தொடர்ந்து, விவசாயிகள் ஷம்பு எல்லையிலேயே கூடாரங்கள் அமைத்து நேற்று முன்தினம் இரவு தங்கி விட்டனர். தங்கள் டிராக்டர்களை பஞ்சாப் எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் ஓரமாக நிறுத்தி வைத்தனர்.
இந்நிலையில், நேற்று காலை ஷம்பு எல்லையில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. பிறகு அங்குள்ள தடுப்புகள் அருகே விவசாயிகள் கூடி நின்றனர். இதையடுத்து அவர்களை நோக்கி அரியானா போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். தடா சிங்க்வாலா-கானாரி எல்லையிலும் மோதல் நடந்தது.
நேற்று தடுப்புகளை அகற்றும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபடவில்லை. இருப்பினும், ஷம்பு எல்லையிலேயே முகாமிட்டுள்ளனர். பஞ்சாப்பில் இருந்து விவசாயிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
ஷம்பு எல்லையில், கண்ணீர்புகை குண்டுகளின் தாக்கத்தை குறைக்க தண்ணீர் டேங்கர் லாரிகளுக்கு இளம் விவசாயிகள் ஏற்பாடு செய்தனர். கண்ணீர்புகை வீச்சால் தாங்கள் காயமடைந்ததாகவும், மூச்சுவிட சிரமப்பட்டதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டினர். இருப்பினும், டெல்லியை நோக்கி செல்ல உறுதி பூண்டிருப்பதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் விவசாயிகளின் 'டெல்லி சலோ' போராட்டத்தின் நோக்கமான தேசியத் தலைநகருக்குள் நுழைவதைத் தடுக்க, போலீசார் தயாராகி வரும் நிலையில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்ணீர் புகை குண்டுகளை டெல்லி போலீசார் ஆர்டர் செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் டெல்லி போலீசார் ஏற்கனவே ஏராளமான கண்ணீர் புகை குண்டுகளை சேமித்து வைத்துள்ளனர் என்றும், மத்திய பிரதேசத்தின் குவாலியரில் உள்ள தேகன்பூரில் அமைந்துள்ள எல்லை பாதுகாப்பு படையின் கண்ணீர் புகைப் பிரிவில் இருந்து மேலும் 30 ஆயிரம் ஆர்டர் செய்துள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
புதிதாக ஆர்டர் செய்யப்பட்ட கண்ணீர் புகை குண்டுகள் குவாலியரில் இருந்து டெல்லிக்கு கொண்டு வரப்படுகிறது என்று கூறப்படுகிறது.