நாடு முழுவதும் விவசாயிகள் ரெயில் மறியல் போராட்டம்

விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்துவிடாதபடி தடுப்பதற்காக பஞ்சாப்-அரியானா எல்லைப் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2024-03-10 07:44 GMT

அமிர்தசரஸ்:

அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், இன்று மதியம் நாடு முழுவதும் 4 மணி நேரம் ரெயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்தனர்.

மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடும்படி சம்யுக்தா கிசான் மோர்ச்சா, மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்தன. அதன்படி பல்வேறு மாநிலங்களில் விவசாய சங்கத்தினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பெரும்பாலான இடங்களில் 12 மணிக்கு முன்னதாகவே போராட்டக் களங்களுக்கு வந்த விவசாய சங்கத்தினர், தண்டவாளத்தில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். விவசாயிகள் போராட்டம் நடத்தும் வழித்தடங்களில் இயக்கப்படும் ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. பாதுகாப்பு கருதி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

விவசாயிகள் கடந்த மாதம் டெல்லியை நோக்கிய பேரணியை தொடங்கினர். நீண்ட கால போராட்டத்திற்கு தேவையான பொருட்களுடன் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஏராளமான டிராக்டர்களில் வந்த விவசாயிகளை பஞ்சாப்-அரியானா இடையே உள்ள ஷம்பு மற்றும் கனவுரி எல்லைகளில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் விவசாயிகள் அங்கேயே கூடாரங்கள் அமைத்து தங்கியிருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் டெல்லிக்குள் நுழைந்துவிடாதபடி தடுப்பதற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு வரும் விவசாய சங்கத்தினரையும் தடுப்பதற்காக டெல்லியின் பல்வேறு இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்