பொங்கல் விருந்து: ஆந்திராவில் மருமகனுக்கு 379 வகையான உணவுகளை பரிமாறிய மாமியார்...!

ஆந்திராவில் பொங்கல் விருந்துக்கு மருமகனை அழைத்து 379 வகையான உணவுகளை பரிமாறி மாமியார் அசத்தியுள்ளார்.

Update: 2023-01-17 07:03 GMT

விசாகப்பட்டினம்,

ஆந்திராவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தலை பொங்கல் கொண்டாடும் மருமகனுக்கு மிக பிரமாண்டமாக விருந்து வைப்பது சமீப ஆண்டுகளாக புகழ்பெற்று வருகிறது. போட்டி போட்டு வகை வகையாக மருமகன்களுக்கு விருந்து வைத்து பொங்கல் திருநாளில் பெயர் பெறுவதை ஆந்திராவில் பல்வேறு பகுதி மக்களும் பெருமையாக கருதுகிறார்கள்.

குறிப்பாக கோதாவரி மாவட்ட மக்கள் இத்தகைய விருந்து வைப்பதில் புகழ் பெற்று திகழ்கிறார்கள். கடந்த ஆண்டு மேற்கு கோதாவரி மாவட்டத்தில் தொழில் அதிபர் ஒருவர் தனது மருமகனுக்கு 365 வகைகளில் பொங்கல் விருந்து வைத்திருந்தார்.

இந்த ஆண்டு எலுரு நகரை சேர்ந்த தொழில் அதிபர் பீமாராவ் அந்த சாதனையை முறியடிக்க முடிவு செய்தார். அவர் மகள் குஷ்மாவை விசாகப்பட்டினம் அருகே உள்ள அனகாபள்ளியை சேர்ந்த புத்தா முரளிதர் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தார். இந்த ஆண்டு முரளிதருக்கு தலை பொங்கல் ஆகும்.

முரளிதரையும், மகள் குஷ்மாவையும் தொழில் அதிபர் பீஷ்மாராவ் தனது வீட்டுக்கு தலை பொங்கல் விருந்துக்கு அழைத்திருந்தார். நேற்று முன்தினம் அவர்களுக்கு தடபுடலாக விருந்து வைக்கப்பட்டது. விருந்தில் 379 வகையான உணவுகள் பரிமாறப்பட்டன. அந்த உணவு வகைகளை பார்த்து மருமகன் முரளிதர் கடும் அதிர்ச்சி அடைந்தார்.

379 வகையான உணவுகளில் 10 சதவீதத்தை கூட அவர் சாப்பிடவில்லை. என்றாலும், இந்த பிரமாண்ட விருந்து ஆந்திராவில் பரபரப்பாக பேசப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்