பெங்களூருவில் சொந்த வீட்டுமனை உள்ளவர்கள் வீடு கட்ட நிதி உதவி பெறுவதற்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு - மாநகராட்சி சிறப்பு கமிஷனர் ராம்பிரசாத் மனோகர் தகவல்

சொந்த வீட்டுமனை உள்ளவர்களுக்கு வீடு கட்ட ரூ.5 லட்சம் நிதி உதவி பெறுவதற்கான காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பெங்களூரு மாநகராட்சி சிறப்பு கமிஷனர் ராம்பிரசாத் மனோகர் கூறியுள்ளார்.

Update: 2022-10-21 18:45 GMT

பெங்களூரு:

பெங்களூரு மாநகராட்சி சிறப்பு கமிஷனர் ராம்பிரசாத் மனோகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விண்ணப்பிக்க வாய்ப்பு

பெங்களூரு மாநகராட்சி எல்லைக்குள் சொந்த வீட்டுமனை உள்ளவர்களுக்கு வீடு கட்ட ரூ.5 லட்சம் நிதி உதவி அளிக்கப்படுகிறது. பி.யூ.சி., டிகிரி மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக மடிக்கணினி வழங்கப்படுகிறது. கண் பார்வையற்றோருக்கு ஸ்மார்ட் ஊன்றுகோல், அவர்களுக்கு மடிக்கணினி, மூத்த குடிமக்களுக்கு மடிக்கும் வகையை சேர்ந்த சக்கர நாற்காலி போன்றவை தகுதியானவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் பயன்களை பெறுவதற்கு தகுதியானவர்கள் வருகிற 19-ந் தேதி வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. இதற்கான காலஅவகாசம் மேலும் 12 நாட்கள் அதிகரிக்கப்பட்டு வருகிற 31-ந் தேதி வரை விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு ஒன் மையங்கள்

இது மட்டுமின்றி பெண்களுக்கு நடமாடும் உணவகம் வாங்க நிதி உதவி, பணிக்கு செல்லும் பெண்களுக்கு இருசக்கர வாகன நிதி உதவியும் அளிக்கப்படுகிறது. இந்த 2 திட்டங்களுக்கு வருகிற நவம்பர் மாதம் 18-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்கள் https//welfare.bbmpgov.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அல்லது பெங்களூரு ஒன் மையங்கள் மூலம் கட்டணம் ரூ.30 செலுத்தி விண்ணப்பிக்கலாம். இணை கமிஷனர் அலுவலகங்களில் இதற்காக உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ராம்பிரசாத் மனோகர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்