காண்டிராக்டர் ஏமாற்றியது அம்பலம் ; மோர்பி பால விபத்து குறித்து ப.சிதம்பரம் கேள்வி...!

மோர்பி பாலத்தை புனரமைத்த 'ஒரேவா' நிறுவனத்தின் உரிமையாளர் பெயர் மற்றும் நகராட்சி அதிகாரிகளின் பெயர் ஏன் எப்பைஆரில் இடம்பெறவில்லை என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.;

Update:2022-11-02 10:58 IST

சென்னை

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் மச்சு நதியில் தொங்குபாலம் அறுந்து விழுந்ததில் 141 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

பாலம் மறு சீரமைப்புக்கு பின் திறந்த 5 நாட்களில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்தது. முதல் கட்ட விசாரணையில் அதிக பாரம் தாங்காமல் இந்த விபத்து நடந்தது தெரிய வந்தது.

150 பேர் நிற்கக்கூடிய பாலத்தில் ஒரே நேரத்தில் 400 பேர் இருந்ததால் பாலம் அறுந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் இந்த தொங்கு பாலத்தை சீரமைக்கும் பணியை மேற்கொண்ட காண்டிராக்டர் அதனை சரிவர செய்யாமல் ஏமாற்றிய விவரம் தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. இந்த பாலம் 1879-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாகும்.

சுமார் 230 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம் சிறந்த சுற்றுலா தளமாக இருந்து வருகிறது. 143 ஆண்டுகள் பழமையான பாலம் என்பதால் அதனை சீரமைக்க முடிவு செய்யபட்டு அதற்கான பணியை மேற்கொள்ள கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஓரேவா என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த பணியை முடிக்க வருகிற டிசம்பர் மாதம் வரை அவகாசம் கேட்டு இருந்தார். ஆனால் அடுத்தடுத்து தீபாவளி மற்றும் குஜராத் புத்தாண்டை யொட்டி அதற்கு முன்பாக பணியை முடிக்குமாறு உத்தரவிடப்பட்டதாக தெரிகிறது.

இதனால் அவசரகதியில் இந்த பணி நடந்து கடந்த 26-ந்தேதி மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. தனியார் நிறுவனத்தின் காண்டிராக்டர் தொங்கு பாலத்தை தாங்கி பிடிக்கும் கேபிள்களை மாற்றாமல் வர்ணம் மட்டும் பூசி புதுப்பிக்கப்பட்டது போல மாற்றினார். இதுதான் 141 பேர் உயிர் இழந்ததற்கு காரணமாக அமைந்து விட்டது.

இதனால் அந்த நிறுவனம் முழுமையாக பாலத்தை சீரமைத்ததா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணைக்கு பிறகுதான் விபத்துக்கான முழு விவரம் தெரியவரும். இந்தநிலையில் பிரதமர் மோடி நேற்று சம்பவம் நடந்த தொங்கு பாலத்தை நேரில் பார்வையிட்டார்.

விபத்து தொடர்பாக அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து ஆறுதல் கூறினார். இதையடுத்து அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் இந்த விபத்து குறித்த வழக்குப்பதிவில் பாலத்தை சீரமைத்த நிறுவனத்தின் பெயர், நகராட்சி நிர்வாகிகளின் பெயர் ஏன் இடம்பெறவில்லை? என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், "மோர்பி பாலத்தை புனரமைத்த 'ஒரேவா' நிறுவனத்தின் உரிமையாளர் பெயர் மற்றும் நகராட்சி அதிகாரிகளின் பெயர் ஏன் எப்பைஆரில் இடம்பெறவில்லை.

அதேபோல முதல் மந்திரி மற்றும் மாநில மந்திரிகள் ஏன் பதவி விலகவில்லை? விபத்து குறித்து கேள்வியெழுப்பினால் அது சோகத்தை அதிகரிப்பதாக அர்த்தமா?

ஏன் பதில் தர மறுக்கிறீர்கள்?

விபத்து நடந்து 48 மணி நேரத்திற்கும் அதிகமாக ஆகியும் இந்த கேள்விகளுக்கு பாஜகவும், குஜராத் மாநில அரசும் இன்னும் ஏன் பதிலளிக்கவில்லை?" என்று கேள்வியெழுப்பியுள்ளார்.




Tags:    

மேலும் செய்திகள்