தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணன் கைது; அமலாக்க துறை நடவடிக்கை
தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணனை அமலாக்க துறை இன்று கைது செய்து 4 நாட்கள் விசாரணை காவலுக்கு அழைத்து சென்றுள்ளது.;
மும்பை,
தேசிய பங்குச்சந்தையின் நிர்வாக இயக்குனராக கடந்த 2013ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை பதவியில் இருந்தவர் சித்ரா ராமகிருஷ்ணன் (வயது 58). அவர் தேசிய பங்குச்சந்தையின் தலைமை செயல் அதிகாரியாகவும் இருந்துள்ளார்.
இவர் தனது பதவிக்காலத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) குற்றம் சாட்டியது. இமயமலையில் உள்ள ஒரு சாமியாரிடம் பங்குச்சந்தை ரகசியங்களை பகிர்ந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. அத்துடன் முன் அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்பிரமணியன் என்பவரை தலைமை வியூக அதிகாரியாக நியமித்து சலுகைகளை வழங்கினார் எனவும் அவர் மீது புகார் எழுந்தது.
இவர், தேசிய பங்குச்சந்தை விவரங்களை ஏஜென்டுகளுக்கு முன்கூட்டியே கசியவிட்ட ஊழல், நிர்வாக முறைகேடுகள், பண மோசடி தொடர்பாக கடந்த மார்ச் 6ந்தேதி சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் ஆனந்த் சுப்பிரமணியன் மீதும் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனந்த் சுப்பிரமணியன் பிப்ரவரி 25ந்தேதி கைது செய்யப்பட்டார். நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள இவர்களுக்கு எதிரான வழக்கு, டெல்லியில் உள்ள சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதில் இருவருக்கும் எதிராக சி.பி.ஐ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். சித்ரா ராமகிருஷ்ணன் மீது பண மோசடி வழக்கு தொடர்பாக மத்திய விசாரணை அமைப்பான அமலாக்க இயக்ககம் விசாரித்து வருகிறது. சித்ரா ராமகிருஷ்ணாவின் பதவிக்காலத்தில் தேசிய பங்குச்சந்தையில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து வருமானவரித்துறையும் மற்றொருபுறம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், சித்ரா ராமகிருஷ்ணனை அமலாக்க துறை இன்று கைது செய்துள்ளது. அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, விசாரணை காவலில் எடுக்க அனுமதி கோரியது. இதனை தொடர்ந்து 4 நாட்கள் அவரை விசாரணைக்கு அழைத்து செல்ல அமலாக்க துறைக்கு சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.