காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை தீயிட்டு கொளுத்திய ஈசுவரப்பா

பஜ்ரங்தள அமைப்புக்கு தடை விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை ஈசுவரப்பா தீயிட்டு கொளுத்தினார். மேலும் அவர் பேசுகையில், டி.கே.சிவக்குமார், சித்தராமையாவை கைது செய்வோம் என்று கூறினார்.;

Update: 2023-05-04 23:09 GMT

கலபுரகி:-

காங்கிரஸ் அறிக்கையை தீயிட்டு கொளுத்தினார்

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில், பஜ்ரங்தள அமைப்புக்கு தடை விதிப்போம் என அறிவித்துள்ளது. இதற்கு பா.ஜனதா, இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் போராட்டங்களையும் நடத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நேற்று மாநிலம் முழுவதும் அனைத்து இந்து கோவில்களிலும் அனுமன் மந்திரம் ஓதும் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிலையில் கலபுரகி டவுனில் தேர்தல் பிரசாரத்திற்காக வந்திருந்த பா.ஜனதா முன்னாள் மந்திரியும், அக்கட்சியின் மூத்த தலைவருமான ஈசுவரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த சமயத்தில் அவர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை தீவைத்து கொளுத்தி காங்கிரசுக்கு எதிராக தனது எதிர்ப்பை பதிவு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

காங்கிரஸ் தோல்வி அடையும்

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தேச துரோகம். இந்த அறிக்கையை காங்கிரஸ் கட்சி உடனடியாக திரும்ப பெற வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் பி.எப்.ஐ. மீதான 173 வழக்குகளை திரும்பபெற்றுள்ளது. பயங்கரவாதத்தை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறது. நாட்டில் பி.எப்.ஐ. தடை செய்யப்பட்டு இருப்பது பற்றி காங்கிரசுக்கு தெரியுமா?.

பி.எப்.ஐ. என்ற தேசவிரோத அமைப்பை பா.ஜனதா அரசு தடை செய்துள்ளது. பஜ்ரங்தள விவகாரத்தால் காங்கிரஸ் கட்சி தோல்வி அடையும். எதிர்க்கட்சிகள் பெறும் அளவுக்கும் கூட காங்கிரஸ் கட்சி வெற்றி பெறாது.

கைது செய்வோம்

ராவணன் ஆஞ்சநேயரின் வாலை தீவைத்து எரித்தான். இதனால் ராவணனின் சக்தி அழிக்கப்பட்டது. அதுபோல் பஜ்ரங்தளத்தை தொட்டதால் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை பிடிக்காது. பஜ்ரங்தள அமைப்பு ஒரு தேசபக்தி இயக்கம். முகம்மது அலி ஜின்னா அறிக்கை தான், காங்கிரசின் தேர்தல் அறிக்கை. இந்த தேர்தல் அறிக்கையை உடனே திரும்ப பெற வேண்டும்.

டி.கே.சிவக்குமார், சித்தராமையா ஆகியோர் சாதியால் மக்களை பிளவுப்படுத்தி வருகிறார்கள். மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்ததும், அவர்களை கைது செய்து சிறைக்கு அனுப்புவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்