குளத்தில் குதித்து என்ஜினீயரிங் மாணவி தற்கொலை

சிக்கமகளூருவில் குளத்தில் குதித்து என்ஜினீயரிங் மாணவி தற்கொலை செய்துகொண்டார். அவருடைய தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-01-29 20:40 GMT

சிக்கமகளூரு-

என்ஜினீயரிங் கல்லூரி மாணவி

சிக்கமகளூரு டவுன் வீட்டு வசதி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சிஞ்சனா (வயது 21). இவர் அந்தப்பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக சிஞ்சனா சோர்வாக காணப்பட்டு வந்தார். இதுதொடர்பாக அவரது பெற்றோரும் சிஞ்சனாவிடம் விசாரித்து வந்தனர். ஆனால் அவர் எதுவும் கூறாமல் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சிஞ்சனா வெளியே சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், சிஞ்சனாவை பல இடங்களில் தேடினர்.

தற்கொலை

அப்போது அந்தப்பகுதியில் உள்ள குளக்கரையில் சிஞ்சனாவின் காலணிகள் மற்றும் கைப்பை கிடந்தது. இதுகுறித்து உடனடியாக சிக்கமகளூரு டவுன் போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் தீயணைப்பு படையினர் குளத்தில் குதித்து தேடினர். அப்போது குளத்துக்குள் இருந்து சிஞ்சனாவின் உடல் மீட்கப்பட்டது.

சிஞ்சனாவின் உடலை பார்த்து அவரது பெற்றோர் கதறி அழுதனர். இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சிஞ்சனா, குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

போலீஸ் விசாரணை

ஆனால் அவருடைய தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து சிக்கமகளூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து சிஞ்சனா உடல் நலக்குறைவால் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்