ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் கைது - அமலாக்கத் துறை நடவடிக்கை
ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.
மும்பை,
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 1992-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமாக வலம் வந்த ஜெட் ஏர்வேஸ் 2017-ம் ஆண்டுக்குப் பிறகு கடும் நஷ்டத்தைச் சந்திக்கத் தொடங்கியது. 2016- 17 நிதி ஆண்டின் நான்காம் காலாண்டில் அந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.600 கோடியாக இருந்தது. அடுத்த ஓராண்டில், அதாவது 2017-18 நிதி ஆண்டின் நான்காம் காலாண்டில் அந்நிறுவனம் ரூ.1,000 கோடி நஷ்டத்தைச் சந்தித்தது.
இது விமானத்துறை மத்தியில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அடுத்தடுத்த மாதங்களில் ஜெட் ஏர்வேஸின் பங்கு மதிப்பு கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. இழப்பைச் சமாளிக்க ஊழியர்களின் ஊதியத்தை ஜெட் ஏர் வேஸ் குறைத்தது. அதைத் தொடர்ந்து வெளிநாட்டு சேவைகளைப் படிப்படியாகக் குறைக்கத் தொடங்கியது. இழப்பு அதிகமான நிலையில், நிறுவனத்தை தொடர்ந்து நடத்த முடியாத நிலைக்கு ஜெட் ஏர்வேஸ் உள்ளானது. இதையெடுத்து 2019 ஏப்ரல் மாதம் ஜெட் ஏர்வேஸ் அதன் விமான சேவையை முழுமையாக நிறுத்தியது. அதன் பிறகு ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் திவால் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டது.
2021 ஜூன் மாதம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை ஜாலான் - கால்ராக் வாங்கியது. இவ்வாண்டு இறுதிக்குள் ஜெட் ஏர்வேஸ் சேவை மீண்டும் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வங்கியிலிருந்து கடன் பெற்று மோசடி செய்த வழக்குத் தொடர்பாக நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ சோதனை மேற்கொண்டது.
இந்தநிலையில் மும்பையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேற்று முதல் அவரிடம் விசாரணை நடந்துவந்தது. விசாரணையின் முடிவில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA)கீழ் கைது செய்யப்பட்டார். வங்கியில் ரூ.538 கோடி மோசடி செய்த குற்றச்சாட்டில் மும்பையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நாளை மும்பை பிஎம்எல்ஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். இந்த ஆண்டு மே மாதம் தொடக்கத்தில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) பதிவு செய்த எப்ஐஆர் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.