7-ந் தேதி நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்; டி.கே.சிவக்குமார் பேட்டி

வருகிற 7-ந் தேதி நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருப்பதாக டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

Update: 2022-10-02 18:45 GMT

பெங்களூரு:

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் மைசூரு மாவட்டம் பதனாலுவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பாகுபாடு கிடையாது

மகாத்மா காந்தி, நேரு, சரோஜினி நாயுடு, பகத்சிங் போன்ற பல வீர போராட்டக்காரர்கள் நாட்டை ஒற்றுமைப்படுத்தினர். இப்போது நாடடின் பிரச்சினைகளை அறிந்து அவற்றுக்கு தீர்வு காணும் நோக்கத்தில் ராகுல் காந்தி பாதயாத்திரையை தொடங்கியுள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலை குறித்து மக்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடி வருகிறார்.

காந்தி குடும்பத்தால் மட்டும் நாட்டை ஒற்றுமையாக அரவணைத்து அழைத்து செல்ல முடியும். காங்கிரசின் சித்தாந்தம் எப்போதும் மாறாது. நாட்டின் முன்னேற்றத்திற்காக காங்கிரஸ் பாடுபடுகிறது. ஒட்டுமொத்த நாடே காங்கிரசை ஆதரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. சாதி, மதம், மொழி, நிறம் போன்ற பாகுபாடுகள் கிடையாது. நாம் அனைவரும் ஒன்றே.

பா.ஜனதா வர முடியாது

'பே-சி.எம்.' டீ-சர்ட் அணிந்த காங்கிரஸ் தொண்டரை போலீசார் கைது செய்துள்ளனர். எங்களின் பலம் அதிகரிக்க அதிகரிக்க எதிரிகளும் அதிகரிக்கிறார்கள். பா.ஜனதாவினரிடம் ஆட்சி அதிகாரம் இருக்கலாம். அவர்கள் இந்த சமுதாயத்தை உடைக்க முயற்சி செய்யலாம். எங்களுக்க தினமும் தொந்தரவு கொடுக்கலாம். ஆனால் காங்கிரசின் பலத்திற்கு சமமாக பா.ஜனதா வர முடியாது.

பா.ஜனதாவினர் என்ன செய்தாலும் மக்களை திசை திருப்ப முடியாது. எனக்கு எதிரான வழக்குகளில் அமலாக்கத்துறை, சி.பி.ஐ. விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குகிறேன். என் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துவிட்டனர். சட்டவிரோதமாக சொத்துகளை குவித்ததாக தொடரப்பட்ட வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியுள்ளனர்.

தனித்தனியாக வருவாய்

அரசியல் ரீதியாக எனக்கு தொந்தரவை ஏற்படுத்தும் நோக்கத்தில் பா.ஜனதாவினர் இவ்வாறு செய்கிறார்கள். எனது குடும்ப உறுப்பினர்களின் சொத்துகள் அரசு சொத்து அல்ல. ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வருவாய் கிடைக்கிறது. இதுபற்றி விசாரணை அதிகாரிகளிடம் கூறியுள்ளேன். இதை விசாரணை அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும். எனக்கு தொல்லை கொடுப்பதை விட்டுவிட்டு சட்ட ரீதியாக விசாரணை நடத்த வேண்டும்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் விசாரணை நடத்துவதற்காக வருகிற 7-ந் தேதி ஆஜராகும்படி அமலாக்கத்துறை எனக்கு சம்மன் அனுப்பியுள்ளது. எனது சகோதரர் டி.கே.சுரேசுக்கும் நோட்டீசு அனுப்பியுள்ளனர். ராகுல் காந்தியின் பாதயாத்திரை நடைபெறும் இந்த நேரத்தில் எனக்கு இடையூறு ஏற்படுத்துகிறார்கள். வருகிற 7-ந் தேதி ஒக்கலிக சமூகத்தை சேர்ந்த ஆதிசுஞ்சனகிரி மடாதிபதியை ராகுல் காந்தியை நோில் சந்திக்க உள்ளார். அந்த நாளில் எனக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். அதனால் நேரில் ஆஜராக காலஅவகாசம் கோர உள்ளேன்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்