அமலாக்கத்துறை தொடர்ந்து தொல்லை கொடுக்கிறது- டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு

அமலாக்கத்துறை தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டியுள்ளார்.

Update: 2022-11-05 20:42 GMT

பெங்களூரு:- 

பெங்களூருவில் நேற்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

நேஷனல் ஹெரால்டு வழக்கில் வருகிற 7-ந் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி கோரி அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பி வைத்துள்ளனர். எனக்கும், சகோதரர் டி.கே.சுரேஷ் எம்.பி.க்கும் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு சம்பந்தப்பட்ட சில ஆவணங்களை தாக்கல் செய்யும்படி அமலாக்கத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். அந்த ஆவணங்களை அதிகாரிகளிடம் வழங்குவோம். விசாரணை என்ற பெயரில் அடிக்கடி சம்மன் அனுப்பி அமலாக்கத்துறை தொடர்ந்து தொல்லை கொடுக்கிறது. என்னை எதற்காக அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு அழைத்து தொல்லை கொடுக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி அமலாக்கத்துறையும், சி.பி.ஐ.யும் மறு விசாரணை நடத்துவதற்கு திட்டமிட்டு வருகின்றனர். அதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர். இது சட்டத்திற்கு எதிரானதாகும். இதனை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளேன். இந்த வழக்கில் ஐகோர்ட்டு அளிக்கும் தீர்ப்புக்கு தலை வணங்குவேன். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்த போதெல்லாம் ஆஜராகி தகவல்களை தெரிவித்துள்ளேன்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்