கர்நாடகம் முழுவதும் மயானங்களில் ஆக்கிரமிப்பு நிலங்களை உடனடியாக மீட்க வேண்டும்; மாநில அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
கர்நாடகம் முழுவதும் மயானங்களில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு:
மயானங்கள் ஆக்கிரமிப்பு
கர்நாடகத்தில் மயானங்கள் இல்லாத கிராமங்கள் மற்றும் டவுன் பகுதிகளுக்கு இடம் ஒதுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி பெங்களூருவை சேர்ந்த முகமது இக்பால் என்பவர் கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு நீதிபதி வீரப்பா முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் மாநிலத்தில் 1,454 கிராமங்களில் மயானங்களுக்கு அரசு சார்பில் இடம் ஒதுக்கப்படவில்லை என்று ஐகோர்ட்டில், அரசு சார்பில் கடந்த மாதம் 28-ந் தேதி பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
அந்த மனு மீதான விசாரணை நீதிபதி வீரப்பா முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், மாநிலத்தில் மயானங்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளதாக மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் வாதிட்டார்.
நிலங்களை மீட்க உத்தரவு
மேலும் மாநிலத்தில் பல்வேறு கிராமங்களில் மயானங்களுக்கான நிலங்கள் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதால், அந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் உயிா் இழந்தவர்களுக்கு இறுதி சடங்கு நடத்த முடியாத நிலை உள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் தெரிவித்தாா். உடனே மாநிலத்தி்ல் எந்த மாவட்டங்களில் எல்லாம் மயானங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது என்பது பற்றி வருவாய்த்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி வீரப்பா உத்தரவிட்டார்.
மேலும் மாநிலம் முழுவதும் மயானங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தால், அந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், அந்த நிலங்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று அரசுக்கு, நீதிபதி வீரப்பா உத்தரவிட்டுள்ளார்.