சபாநாயகர் தேர்தல்; இந்தியா கூட்டணி வேட்பாளர் பற்றி எங்களுடன் ஆலோசிக்கவில்லை: திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. அபிஷேக் பானர்ஜி கூறும்போது, சபாநாயகர் தேர்தல் விவகாரத்தில் எங்களுடைய கட்சி தலைவர் மம்தா பானர்ஜி முடிவு செய்வார் என கூறியுள்ளார்.;

Update:2024-06-25 20:37 IST

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றியது. பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 3-வது முறையாக ஆட்சியமைத்துள்ளது.

இதனிடையே, நாடாளுமன்ற மக்களவை சபாநாயகரை தேர்ந்தெடுப்பதில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. சபாநாயகர் பதவிக்கு போட்டியிட பா.ஜ.க. சார்பில் ஓம் பிர்லா வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அவருக்கு எதிராக இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்தியுள்ளது.

கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.யான கொடிக்குனில் சுரேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருடைய வேட்புமனு இன்று காலை 11.50 மணியளவில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதில் இந்தியா கூட்டணியில் இடம் பெற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கையெழுத்திடவில்லை என கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் உங்களுடைய கட்சியின் நிலைப்பாடு என்னவென்று? அக்கட்சியின் எம்.பி. அபிஷேக் பானர்ஜியிடம் கேட்டபோது, எங்களை யாரும் தொடர்பு கொள்ளவில்லை. பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. துரதிர்ஷ்டவசத்தில் இது, ஒரு தலைப்பட்ச முடிவு. எங்களுடைய கட்சி தலைவர் மம்தா பானர்ஜி இதுபற்றி முடிவு செய்வார் என்று கூறியுள்ளார்.

எனினும், சிறிது நேரத்திற்கு பின்னர் மக்களவையில், ராகுல் காந்தி மற்றும் மம்தா பானர்ஜி இருவரும் மக்களவையில் ஒன்றாக உரையாடி கொண்டிருந்தனர். அப்போது இந்த விவகாரம் பற்றி மம்தா பானர்ஜியிடம் பேசி ஒரு முடிவுக்கு வருவீர்களா? என நிருபர்கள் கேட்டதற்கு, அரசியல் சாசனத்திற்கு புகழ் உண்டாகட்டும் என ராகுல் காந்தி கூறினார். இந்த சூழலில், நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் தேர்தல் நாளை நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்