மாற்றுக்கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் தேவை எங்களுக்கு இருக்காது; மத்திய மந்திரி ஷோபா பேட்டி

சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 125 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், ஆபரேசன் தாமரை மூலம் மாற்றுக்கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் தேவை எங்களுக்கு இருக்காது என்றும் மத்திய மந்திரி ஷோபா கூறியுள்ளார்.

Update: 2023-05-11 18:45 GMT

பெங்களூரு:

சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 125 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், ஆபரேசன் தாமரை மூலம் மாற்றுக்கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் தேவை எங்களுக்கு இருக்காது என்றும் மத்திய மந்திரி ஷோபா கூறியுள்ளார்.

மத்திய மந்திரி ஷோபா பேட்டி

கர்நாடக சட்டசபை தேர்தல் நிறைவடைந்துள்ளது. இதில் 72.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், ஓட்டு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில், காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய மந்திரி ஷோபா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடக சட்டசபை தேர்தலில் வாக்காளர்கள் ஆர்வமாக வந்து வாக்களித்துள்ளனர். முதியவர்களுக்கு வீட்டிலேயே வாக்களிக்க வசதி செய்யப்பட்டு இருந்தது. ஆனால் பல முதியவர்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து தங்கள் வாக்கை பதிவு செய்துள்ளனர். இந்த முறை பெங்களூருவில் ஓட்டுப்பதிவு அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 53, 54 சதவீதத்தை தாண்டவில்லை.

பா.ஜனதாவுக்கு பலன்

இது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. பெங்களூரு நகர மக்கள் இனி வரும் தேர்தல்களிலாவது ஆர்வமாக வந்து வாக்களிக்க வேண்டும். கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் அளவுக்கு தான் தற்போதும் ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது. இதை பார்க்கும்போது, பா.ஜனதா 125 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கிறோம். தற்போது வெளிவந்துள்ள கருத்து கணிப்புகள் பொய்யாகும்.

அதனால் ஆபரேசன் தாமரை மூலம் மாற்று கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுக்க வேண்டிய தேவை எங்களுக்கு இருக்காது. பிரதமர் மோடியின் தீவிர பிரசாரத்தால் பா.ஜனதாவுக்கு பலன் கிடைத்துள்ளது. அதனால் நாங்கள் நிச்சயம் ஆட்சி அமைப்போம். தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. எங்களின் தொண்டர்கள் பூத் மட்டத்தில் தகவல்களை திரட்டி அனுப்பியுள்ளனர். அதன் அடிப்படையில் பா.ஜனதா வெற்றி பெறும் என்று சொல்கிறேன்.

இவ்வாறு ஷோபா கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்