சட்டசபை தேர்தல் தேதி அறிவித்ததை தொடர்ந்து திரிபுராவில் வன்முறை அதிகரிப்பு

திரிபுரா சட்டசபை தேர்தல் தேதி அறிவித்ததை தொடர்ந்து அங்கு வன்முறை அதிகரித்துள்ளது. தொடர் தாக்குதல்களும், வீட்டுக்கு தீவைக்கும் சம்பவங்களும் நடந்தன. பலர் காயமடைந்தனர்.

Update: 2023-01-19 23:22 GMT

அகர்தலா,

பா.ஜனதா ஆட்சி நடக்கும் திரிபுராவில், அடுத்த மாதம் 16-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. மார்ச் 2-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. தேர்தல் தேதி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து திரிபுராவில் வன்முறை மூண்டுள்ளது. மேற்கு திரிபுரா மாவட்டம் மஜ்லிஷ்பூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தியது.

அந்த பேரணி மீது 4 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் அஜய்குமார் உள்பட 32 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக போலீசில் புகார் செய்யப்படவில்லை.

பா.ஜனதாவினர்தான் தாக்குதல் நடத்தியதாக காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் கூறினார். ஆனால், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதாக போலீஸ் உதவி ஐ.ஜி. ஜோதிஷ்மன் தாஸ் சவுத்ரி கூறினார். 10 பேர் மட்டும் காயமடைந்ததாக அவர் கூறினார்.

கொலை

ராஜ்நகர் சட்டசபை தொகுதியில் ஒரு பொதுக்கூட்டத்துக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்கள் 5 பேர் தாக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக பா.ஜனதா மீது குற்றம் சாட்டப்பட்டது. போலீசார், காங்கிரஸ், பா.ஜனதா ஆகிய கட்சிகளை சேர்ந்த தலா ஒருவரை கைது செய்தனர்.

தலாய் மாவட்டம் சுர்மா தொகுதியில், தாக்கப்பட்டு கவலைக்கிடமாக கிடந்த ஒருவரை போலீசார் மீட்டனர். போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார். அவர் திரிபுரா பூர்வ குடிமக்கள் கட்சி பிரமுகர் பிரணஜித் நாமசுத்ரா (வயது 44) ஆவார்.

தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கடந்த செவ்வாய்க்கிழமை அவர் போலீசில் புகார் செய்திருந்தார். அவரது கொலை தொடர்பாக அவரது புகாரில் கூறப்பட்டிருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

வீட்டுக்கு தீவைப்பு

செபாகிஜிலா மாவட்டம் பிஷால்கர் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆதரவாளர் நந்து சந்திர தேப்நாத் என்பவரது வீட்டுக்கு ஒரு கும்பல் தீவைத்தது. வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தேப்நாத்தும், அவருடைய குடும்பத்தினரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ஆனால், வீட்டில் இருந்த ரொக்கம் மற்றும் நகைகள் தீயில் எரிந்து கருகின. இதற்கு பா.ஜனதா மீது தேப்நாத் குற்றம் சாட்டினார்.

துணை ராணுவம் குவிப்பு

தேர்தல் அறிவித்த 12 மணி நேரத்தில் மேற்கண்ட வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. எல்லாவற்றுக்கும் பா.ஜனதா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷனுக்கு சவால் விட்டு, பா.ஜனதாவினர் வன்முறையில் ஈடுபட்டு வருவதாக காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் கூறியுள்ளன.

அதே சமயத்தில், மாநில தலைைம தேர்தல் அதிகாரி கிரண் கிட்டி கூறியதாவது:-

ஒவ்வொரு சம்பவத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆங்காங்கே கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர். வன்முறை சிறிதும் இன்றி தேர்தல் நடத்த விரும்புகிறோம். அதற்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்