நன்னடத்தை விதிகளை மீறியதாக புகார்; அசாம் முதல்-மந்திரி நேரில் ஆஜராக தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
ஹிமந்தா பிஸ்வா சர்மா தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறியதாக காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.
புதுடெல்லி,
சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தல் இரண்டு கட்டங்களாக வரும் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்நிலையில் கடந்த 18-ந்தேதி அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா சத்தீஸ்கரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் காங்கிரஸ் மூத்த தலைவர் முகமது அக்பர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஹிமந்தா பிஸ்வா சர்மா தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறியதாக காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக அசாம் முதல்-மந்திரியிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் வரும் 30-ந்தேதி மாலை 5 மணிக்குள் ஹிமந்தா பிஸ்வா சர்மா நேரில் ஆஜராக வேண்டும் என்றும், இல்லாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.