சோரன் மீதான பண மோசடி வழக்கு: பிரிட்ஜ், ஸ்மார்ட் டிவி பில்களை ஆதாரமாக சேர்த்த அமலாக்கத்துறை
நிலத்தில் சுற்றுச் சுவர் கட்டுமான பணியின்போது ஹேமந்த் சோரன் உடனிருந்து வேலை செய்ததாக அமலாக்கத்துறையிடம் சந்தோஷ் முண்டா தெரிவித்துள்ளார்.;
நில மோசடி மற்றும் பண மோசடி தொடர்பான வழக்கில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜனவரி மாதம் கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு ராஞ்சியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் கடந்த மாத இறுதியில் அமலாக்கத்துறை தரப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
191 பக்கங்கள் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில் ஹேமந்த் சோரன், ராஜ்குமார் பஹான், ஹிலாரியாஸ் கச்சாப், பானு பிரதாப் பிரசாத் மற்றும் பினோத் சிங் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். ராஞ்சியில் 31 கோடி ரூபாய் மதிப்புள்ள 8.86 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்தியிருப்பதாக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது. சிமென்ட் சுற்றுச் சுவரால் பாதுகாக்கப்பட்ட 12 அடுத்தடுத்த நிலங்கள் கடந்த மாதம் 30ம் தேதி அமலாக்கத்துறையால் கையகப்படுத்தப்பட்டன.
அமலாக்கத்துறை தனது குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் முக்கிய ஆதாரமாக, பிரிட்ஜ் மற்றும் ஸ்மார்ட் டி.வி.யின் பில்களை காட்டியிருக்கிறது. இந்த ரசீதுகளை ராஞ்சியைச் சேர்ந்த இரண்டு டீலர்களிடமிருந்து பெற்று குற்றப்பத்திரிகையில் இணைத்துள்ளது.
இந்த 2 ரசீதுகளும் சந்தோஷ் முண்டாவின் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் வாங்கப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. ஹேமந்த் சோரன் முறைகேடாக பெற்றதாக கூறப்படும் 8,86 ஏக்கர் சொத்தின் காப்பாளராக 14 முதல் 15 ஆண்டுகள் வரை இருந்ததாக அமலாக்கத்துறை விசாரணையின்போது சந்தோஷ் முண்டா தெரிவித்திருக்கிறார்.
அந்த நிலத்துக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற சோரன் கூறியதை பொய் என நிரூபிக்க சந்தோஷ் முண்டாவின் வாக்குமூலத்தை அமலாக்கத்துறை பயன்படுத்தி உள்ளது. மேலும், அந்த நிலத்திற்கு ராஜ்குமார் பஹான் என்ற நபர் உரிமை கோரியதையும் அமலாக்கத்துறை நிராகரித்தது.
அந்த நிலத்தை ஒதுக்கீடாக பெற்றவர்கள், சில நபர்களுக்கு விற்றதாகவும், அவர்களை சோரன் வெளியேற்றிவிட்டு 2010-11ல் நிலத்தின் கட்டுப்பாட்டை பெற்றதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது.
ஹேமந்த் சோரனும் அவரது மனைவி கல்பனாவும், இரண்டு முதல் மூன்று முறை அந்த நிலத்திற்குச் சென்றதாகவும், அந்த இடத்தில் சுற்றுச் சுவர் கட்டுமான பணியின்போது ஹேமந்த் சோரன் கூடவே இருந்து வேலை செய்ததாகவும் அமலாக்கத்துறை விசாரணையின்போது சந்தோஷ் முண்டா தெரிவித்துள்ளார்.
சோரனின் உத்தரவின் பேரில் சொத்துக் காப்பாளர் பொறுப்பு சந்தோஷ் முண்டாவிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அமலாக்கத்துறை கூறுகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஹிலாரியாஸ் கச்சாப், அங்கு மின்சார மீட்டர் பொருத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகையில் ஆதாரமாக சேர்க்கப்பட்டுள்ள பிரிட்ஜ், 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முண்டாவின் மகன் பெயரிலும், ஸ்மார்ட் டிவி 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் முண்டாவின் மகள் பெயரிலும் வாங்கப்பட்டுள்ளது. அந்த பில்லில், வழக்கில் உள்ள நிலத்தின் முகவரி உள்ளது. எனவே, இந்த நிலத்தில் சந்தோஷ் முண்டாவும் அவரது குடும்பத்தினரும் வசித்து வந்தனர் என்பதும், குற்றம்சாட்டப்பட்ட ராஜ்குமார் பஹான் வசம் இல்லை என்பதும் நிரூபணமாகியிருப்பதாக அமலாக்கத்துறை கூறியிருக்கிறது.
அரசுத் தரப்பு புகாரை சிறப்பு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.