பிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த பெண் தலைவர் மரணம் - ஜனாதிபதி இரங்கல்

சுக்னா குமாரி தியோ, ஒடிசா சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து 10 முறை வெற்றி பெற்று எம்.எல்.ஏ. பதவியை அலங்கரித்துள்ளார்.;

Update:2024-02-11 05:44 IST

கோப்புப்படம்

புதுடெல்லி,

ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் கட்சியின் (பி.ஜே.டி.) மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் வி.சுக்னா குமாரி தியோ (வயது 87). இவர் வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதற்காக அவர் சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவரது உடல்நிலை மோசமாக இருந்தது. இதையடுத்து ஒடிசா மாநில முதல்-மந்திரியும், பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக் நேற்று முன்தினம் சென்னை வந்தார். சுக்னா குமாரி தியோவின் உடல்நலம் குறித்து விசாரித்து சென்றார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுக்னா குமாரி தியோவின் உயிர் பிரிந்தது. மரணமடைந்த சுக்னா குமாரி தியோ சென்னையில் பிறந்தவர். சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். இவரது மாமனார் ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள கல்லிகோடு சமஸ்தானத்தின் முன்னாள் அரசர் ஆவார். சுக்னா குமாரி தியோ, ஒடிசா அரசியலில் கடந்த 1960-ம் ஆண்டு கால் தடம் பதித்தார்.

1961-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கல்லிகோடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களம் இறங்கி வெற்றி வாகை சூடினார். பின்னர் பிஜு ஜனதா தளம் கட்சியில் ஐக்கியம் ஆனார். இவர் ஒடிசா சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து 10 முறை வெற்றி பெற்று எம்.எல்.ஏ. பதவியை அலங்கரித்துள்ளார்.அமைச்சர் பதவி இவரை தேடி வந்த போதும் அவர் ஏற்காமல் நிராகரித்தார்.

அரச குடும்பத்தின் மருமகள் என்பதால், ''ஒரு ராணி ஒருபோதும் அமைச்சராக முடியாது'' என்று அதற்கு காரணமும் கூறினார். இவர், தாழ்த்தப்பட்ட சமுதாய பெண்களின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொண்டவர். சுக்னா குமாரி தியோ மறைவுக்கு ஒடிசாவை சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகளும் இரங்கல் தெரிவித்துள்ளன.

சுக்னா குமாரி தியோ மறைவு தொடர்பாக இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது எக்ஸ் வலைதளத்தில், "ஒடிசா சட்டமன்றத்தில் பத்து முறை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய மூத்த தலைவரான வி. சுக்னனா குமாரி தியோவின் மறைவு வருத்தமளிக்கிறது. கட்சிகளைக் கடந்து அனைவரின் மரியாதையையும் பெற்றார். மாநிலத்தின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு மகத்தானது. அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பின்பற்றுபவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அதில் பதிவிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்