மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விஷம் குடித்த வாலிபரை காப்பாற்றிய போலீசார்

மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விஷம் குடித்த வாலிபரை காப்பாற்றிய போலீசாருக்கு பாராட்டுகள் குவித்து வருகின்றனர்.

Update: 2022-09-29 19:00 GMT

மங்களூரு;


ஹாசன் மாவட்டம் அரக்கல்கோடு தாலுகா ராமநாகபூரை சேர்ந்தவர் சுனில்(வயது 28). இவர் நேற்றுமுன்தினம் மங்களூருவில் உள்ள தர்மஸ்தலாவுக்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அங்கு வந்த அவர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு பின்னர், காந்தி சர்க்கிள் அருகே உள்ள மலைக்காடு பகுதிக்கு சென்றுள்ளார்.

அங்கு வைத்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். மேலும் இதனை தனது செல்போனில் வீடியோவாக எடுத்து தனது குடும்பத்தினருக்கு அனுப்பியுள்ளார். அந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்து குடும்பத்தார் உடனே தர்மஸ்தலா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் காட்டுப்பகுதிக்கு விரைந்து சென்று சுனிலை தேடினர்.

அப்போது அங்கு மயக்க நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சுனிலை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக அவரை உஜிரேயில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரித்ததில் சுனிலுக்கும், அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தான் அவர் தற்கொலைக்கு முயற்சி செய்தது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா். போலீசாரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்