ரூ.20 லட்சம் போதைப்பொருட்கள் பறிமுதல்; கேரள வாலிபர் கைது
போதைப்பொருட்கள் விற்ற கேரள வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பசவனகுடி:
பெங்களூரு பசவனகுடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போதைப்பொருட்கள் விற்கும் கும்பலை பிடிக்க பசவனகுடி போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இந்த நிலையில், போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் போதைப்பொருட்கள் விற்று வந்த வாலிபரை கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர் கேரள மாநிலத்தை சேர்ந்த பிபின்ராவ் என்று தெரிந்தது. இவர், பெங்களூருவில் தங்கி இருந்து போதைப்பொருட்களை விற்பனை செய்வதை தொழிலாக வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
பெங்களூருவில் உள்ள கல்லூரி மாணவர்கள், கம்ப்யூட்டர் என்ஜினீயர்களை குறிவைத்து பிபின்ராவ் போதைப்பொருட்களை விற்பனை செய்து பணம் சம்பாதித்து வந்துள்ளார். இவ்வாறு கிடைக்கும் பணத்தின் மூலமாக அவர் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. கைதான பிபின் ராவிடம் இருந்து 200 கிராம் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.20 லட்சம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். கைதான பிபின்ராவ் மீது பசவனகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.