ரூ.21 ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருள் வழக்கு; 2 பேர் கைது

குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் சர்வதேச அளவில் ரூ.21 ஆயிரம் கோடி மதிப்பிலான ஹெராயின் போதை பொருள் கைப்பற்றிய வழக்கில் 2 பேரை தேசிய புலனாய்வு முகமையினர் கைது செய்துள்ளனர்.

Update: 2022-08-25 17:04 GMT



புதுடெல்லி,



குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுமார் 3 ஆயிரம் கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.

குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட 3 டன் ஹெராயின் போதை பொருட்கள் இருப்பதாக வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து நடத்திய சோதனையில் இரு கன்டெய்னர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குஜராத்தில் கடந்த சில ஆண்டுகளில் பிடிபட்ட போதை பொருட்களில் இது அதிக மதிப்பு கொண்ட ஹெராயின் வகையை சேர்ந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.21 ஆயிரம் கோடி ஆகும்.

உலக அளவில் ஹெராயின் அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு ஆப்கானிஸ்தான். உலக அளவில் 80 முதல் 90 சதவீத உற்பத்தி இங்கிருந்து நடக்கிறது. ஆப்கானிஸ்தான் தலீபான்கள் கட்டுப்பாட்டில் வந்தபின், ஹெராயின் உற்பத்தி அதிகரித்து உள்ளது என்று சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தில் தேசிய புலனாய்வு முகமையினர் டெல்லியை சேர்ந்த 2 குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். ஹர்பிரீத் சிங் தல்வார் மற்றும் பிரின்ஸ் சர்மா என்ற அந்த இருவருக்கும், 2,988 கிலோ எடை கொண்ட ஹெராயின் வகை போதை பொருள் வழக்கில் தொடர்பு உள்ளது என அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து கடல்வழியை பயன்படுத்தி, இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் இடையே ஹெராயின் போதை பொருட்களும் கடத்தப்படுகின்றன. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

டெல்லி, குஜராத், பஞ்சாப் மற்றும் மேற்கு வங்காளம் என என்.ஐ.ஏ. அதிகாரிகள் 20 இடங்களில் நடத்திய சோதனையின் அடிப்படையில் குற்றவாளிகள் 2 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்