பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைந்த டிரோன் - சுட்டு வீழ்த்திய பி.எஸ்.எப்.

பஞ்சாப் எல்லை பாதுகாப்புப் படையினர் எக்ஸ் வலைதளத்தில் டிரோனின் புகைப்படத்தோடு பதிவிட்டுள்ளனர்.

Update: 2023-12-09 09:52 GMT

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் மாவட்டத்தின் மாபோக் கிராமம், இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லை அருகே அமைந்துள்ளது. நேற்று இரவு 10.10 மணியளவில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்த கிராமத்தை நோக்கி டிரோன் ஒன்று பறந்து வந்துள்ளது. இதைப் பார்த்த எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் அந்த டிரோனை சுட்டு வீழ்த்தி செயல் இழக்க செய்தனர்.

வயல்வெளியில் விழுந்த டிரோனை இன்று காலை எல்லை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர். அது சீனாவில் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. மேலும் ஒரு பொருளை பிடிப்பதற்கும், அதை விடுவதற்குமான தொழில் நுட்பத்தில் டிரோன் வடிவமைக்கப்பட்டிருந்தது. பாகிஸ்தானில் இருந்து போதைப் பொருட்கள் கடத்தல் கும்பல் இந்த டிரோனை அனுப்பி வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. இதைப்பற்றி பஞ்சாப் எல்லை பாதுகாப்புப் படையினர் எக்ஸ் வலைதளத்தில் டிரோனின் புகைப்படத்தோடு பதிவிட்டுள்ளனர்.

இதேபோல் இந்த வாரம் அமிர்தசரசில் பறந்த டிரோன் ஒன்றை எல்லை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்