ஆண்மை சக்தியை அதிகரிக்குமா, கழுதை இறைச்சி? ஆந்திராவில் சட்டவிரோத விற்பனை அமோகம்

ஆண்மை சக்தியை அதிகரிக்கும் என கூறப்படுவதால் கழுதை இறைச்சிக்கு ஆந்திராவில் கிராக்கி ஏற்பட்டுள்ளது. அங்கு சட்ட விரோத விற்பனை அமோகமாக நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Update: 2022-10-11 19:56 GMT

கழுதை இறைச்சிக்கு தடை

நமது நாட்டில் கழுதையை கொன்று, அவற்றின் இறைச்சியை விற்பனை செய்வதற்கு தடை உள்ளது. இதை மீறி கழுதையைக் கொன்றால் அது இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 429-ன்படி குற்றம் ஆகும்.

இதுபோன்று கழுதை இறைச்சியை சாப்பிட்டால், அது உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டம்-2006-ன் படி குற்றம் ஆகும். இந்த குற்றத்துக்கு 5 ஆண்டு வரை சிறைத்தண்டனை அல்லது கடுமையான அபராதம் அல்லது இரண்டுமேகூட விதிக்கப்படலாம்.

ஆந்திராவில் கிராக்கி

ஆனால் ஆந்திர மாநிலத்தில் கழுதை இறைச்சிக்கு கடும் கிராக்கி உள்ளது. குறிப்பாக கிருஷ்ணா, மேற்கு கோதாவரி, குண்டூர் மாவட்டங்களில் கழுதை இறைச்சி விரும்பி சாப்பிடப்படுகிறது.

கழுதை இறைச்சியை சமைத்து சாப்பிட்டால், அது ஆண்மைச்சக்தியை அதிகரிக்கும், அது மட்டுமின்றி முதுகு வலி, ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளில் இருந்து நல்லதொரு நிவாரணம் தரும் என மக்கள் நம்புகிறார்கள்.

அங்கு கழுதை இறைச்சி ஒரு கிலோ ரூ.600 என விற்பனை செய்யப்படுகிறது.

450 கிலோ இறைச்சி பறிமுதல்

இதுபற்றிய தகவல் கிடைத்து போலீஸ் உஷார் அடைந்து, கழுதை இறைச்சி விற்பனை நடக்கிறதா என தீவிரமாக கண்காணித்து வருகிறது.

இந்த நிலையில் அங்கு பபட்லா மாவட்டத்தில் கழுதை இறைச்சி சந்தை செயல்படுவதை நேற்று முன்தினம் அறிந்தனர். உடனே அங்கு விரைந்தனர். அப்போது அந்த சந்தையில் 400 கிலோ கழுதை இறைச்சி, தலைகள், கால்கள், வால்கள் என இருப்பதை கண்டறிந்தனர். அவற்றை கைப்பற்றினர்.

இது தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்படுகிறது.

இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்