கார் மீது குதிரை வண்டி உரசியதால் ஆத்திரம் - சிறுவனை கடுமையாக தாக்கிய பெண் டாக்டர்

கார் மீது குதிரை வண்டி உரசியதால் ஆத்திரமடைந்த பெண் டாக்டர் சிறுவனை கடுமையாக தாக்கினார்.

Update: 2022-09-16 18:19 GMT

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பாடன் மாவட்டம் அழஹாபூர் பகுதியில் ஆரம்ப சுகாதார மையம் உள்ளது. இதில், ரேனு என்ற பெண் டாக்டர் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், அந்த சுகாதார மையத்திற்கு இன்று குதிரை வண்டியில் ஒரு தம்பதி தனது 10 வயது மகனுடன் வந்துள்ளனர். தம்பதி சுகாதார மையத்திற்குள் சென்ற நிலையில் மோனு என்ற அந்த 10 வயது சிறுவன் மட்டும் குதிரை வண்டி அருகே நின்றுள்ளான்.

அப்போது, பெண் டாக்டர் ரேனுவின் கார் அருகே நிறுத்தப்பட்டிருந்த குதிரை வண்டி கார் மீது உரசியுள்ளது. இதனால், கார் மீது கீறல் விழுந்துள்ளது.

இது குறித்து கார் டிரைவர் டாக்டர் ரேனுவிடம் தெரிவித்துள்ளார். இதை கேட்டு ஆத்திரமடைந்த ரேனு குதிரை வண்டி அருகே நின்றுகொண்டிருந்த சிறுவன் மோனுவை கடுமையாக தாக்கினார். கார் மீது குதிரை வண்டி உரச சிறுவன் மோனு தான் காரணம் என அந்த சிறுவனை கடுமையாக தாக்கியுள்ளார்.

இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. மேலும், பெண் டாக்டர் தாக்கியதில் படுகாயமடைந்த சிறுவன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவன் மீது தாக்குதல் நடத்திய பெண் டாக்டர் ரேனுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்