கர்நாடக மக்களின் கஷ்டங்கள் உங்களுக்கு தெரியுமா?

கர்நாடக மக்களின் கஷ்டங்கள் உங்களுக்கு தெரியுமா? என்று பிரதமர் மோடிக்கு தேவேகவுடா கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2023-05-04 22:51 GMT

ஹாசன்:-

தேவேகவுடா

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர்களை ஆதரித்து மாநிலம் முழுவதும் அக்கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று அவர் ஹாசன் மாவட்டம் பேளுரு மற்றும் சுராப்புரா பகுதிகளில் ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

வருகிற 10-ந் தேதி சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடக்கிறது. 13-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 18-ந் தேதி முதல் குமாரசாமி முதல்-மந்திரியாக ஆட்சி நடத்துவார். இது உறுதி. குமாரசாமி முதல்-மந்திரி ஆக வேண்டும் என்றால் நீங்கள்(மக்கள்) ஜனதா தளம்(எஸ்) கட்சி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும்.

மாற்றாந்தாய் பிள்ளை

மாநில மக்கள் ஆரோக்கியமாக வாழ, கல்வி, மருத்துவ உதவிகள், சுகாதார திட்டங்கள் கிடைத்திட, தங்கு தடையின்றி குடிநீர் கிடைத்திட, அனைத்து மக்களுக்கும் அனைத்து சலுகைகளும் சென்றிட குமாரசாமி முதல்-மந்திரியாக வேண்டும். மத்திய பா.ஜனதா அரசு கர்நாடகத்தை மாற்றாந்தாய் பிள்ளைபோல் பார்க்கிறது.

கர்நாடகத்திற்கு வர வேண்டிய ஏராளமான சாலை திட்டங்கள், விமான நிலைய திட்டங்கள் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவுக்கு சென்றுவிட்டன. இதற்கு காரணம் பிரதமர் மோடியும், கர்நாடகத்தை ஆண்ட பா.ஜனதா அரசும்தான்.

கர்நாடக மக்களின் கஷ்டங்கள்...

பா.ஜனதா, விவசாயிகளை கண்டுகொள்ளவில்லை. அவர்களை வஞ்சித்துவிட்டது. தேசிய அளவில் விவசாயிகளுக்கு பாதுகாப்பு உத்தரவாத இல்லை. அவர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் இல்லை. பேரிடர் காலங்களில் பிரதமர் மோடி கர்நாடகத்திற்கு வரவில்லை. தற்போது தேர்தல் பிரசாரத்திற்காக படையெடுத்து வருகிறார். மத்திய அரசில் கர்நாடகத்தில் இருந்து 25 எம்.பி.க்கள் அங்கம் வகிக்கிறார்கள். ஆனால் அவர்கள் கர்நாடகத்திற்காக எதையும் பெற்றுத்தரவில்லை.

கர்நாடக மக்களைப் பற்றி உங்களுக்கு(பிரதமர் மோடி) என்ன தெரியும். கர்நாடக மக்களின் கஷ்டங்கள் உங்களுக்கு தெரியுமா?.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரசாரம்

அதையடுத்து தேவேகவுடா அரிசிகெரே உள்பட பல இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவருடன் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவர் சி.எம்.இப்ராகிம் மற்றும் கட்சி வேட்பாளர்கள் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்